india

img

நாட்டை விற்கும் நோக்கத்துடன் சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றுகிறது மோடி அரசு.... நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.,குற்றச்சாட்டு....

புதுதில்லி:
நாட்டை விற்கும் நோக்கத்துடன் விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குபடுத்தல் அதிகாரக்குழுமம் (திருத்தச்)சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்  பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா குற்றம்சாட்டினார்.

ஆகஸ்ட் 4 புதன்கிழமையன்று மக்களவை கூடியதும் முக்கிய பிரச்சனைகள் மீது விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.     சபாநாயகர் அவையை 11.30 மணி வரைஒத்தி வைத்தார். 11.30 மணிக்கு அவை கூடியபோதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களின் காரணமாக அவை மீண்டும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.12 மணிக்கு அவை கூடியதும் எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் கொடுத்திருந்த ஒத்திவைப்புத் தீர்மானங்களை அவைத் தலைவர் அனுமதிக்கவில்லை.  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் விவகாரம் மற்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து அவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மதியம் 2 மணிக்கு அவை கூடியதும் முழக்கங்களுக்கிடையே அவை, என்சிஆர் மற்றும் அண்டைப் பகுதிகள் காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணைய சட்டமுன்வடிவு,2021 (The Commission for Air Quality Management of NCRand adjoining Areas Bill,2021) எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை மாலை 3.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.பின்னர் அவை கூடியபோது இதேபோன்றே எவ்வித விவாதமுமின்றி தென்னை வளர்ச்சி வாரிய(திருத்தச்)சட்டமுன்வடிவு குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை வெள்ளி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை
மாநிலங்களவையில் புதனன்று திரிணாமுல்காங்கிரஸ் உறுப்பினர் ஜவகர் சர்க்கார் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். இவர் சமீபத்தில் மேற்கு வங்கத்திலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர் அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் ரத்து தொடர்பாக முழக்கங்களை எழுப்பியதும், அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று கோபத்துடன் கூறினார்.  விவசாயிகள் கிளர்ச்சிப் போராட்டம் தொடர்பாக267ஆவது விதியின்கீழ் அறிவிப்பைப் பெற்றிருப்பதாகவும் அதை அனுமதிப்பதாகவும் கூறினார்.

இந்த சமயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைத்தலைவரின் இருக்கை அருகே வந்து பெகாசஸ் குறித்து  விவாதிக்க வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டார்கள். பதாகைகளை ஏந்தி இருப்பவர்கள் அவையைவிட்டு வெளியேற வேண்டும் என்று வெங்கய்யா நாயுடு கூறினார்.பதாகையை ஏந்தியிருந்த திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆறுபேரை புதனன்று முழுவதும் கூட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்தார்.பின்னர் அவையை 2 மணி வரை ஒத்தி வைத்தார்.மாலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரையறுக்கப்பட்ட பொறுப்புகள் பங்களிப்பு சட்டமுன்வடிவு,2021 (The Limited Liability Partnership Bill, 2021) தாக்கல் செய்தார். பிஜேடி உறுப்பினர் சுஜித் குமார் இதனை ஆதரித்துப் பேசினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்கள் வலுவாக இருந்ததால் ராஜ்யசபா நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜான்பிரிட்டாஸ் பேசுகையில் இந்த அரசாங்கம் நாட்டின்ஜனநாயக அரசியலை அழித்துக்கொண்டிருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஸ் அவரைப் பேச அனுமதிக்கவில்லை.ஏஏபி உறுப்பினர் சுசில் குமார் குப்தா, இந்தச் சட்டமுன்வடிவானது எந்த சிந்தனையுமின்றி கொண்டுவந்திருப்பதாகவும், எப்படி வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனவோ அதேபோன்றே கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். நிதியமைச்சர் பதிலளிக்கையில் ,இந்தச் சட்டமுன்வடிவானது சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் மற்றும் காஸ்ட் அக்கவுண்டண்ட் ஆகியோருக்குப் பயனளிக்கும் என்றார். பின்னர் இது எதிர்க்கட்சிஉறுப்பினர்களின் கடும் எதிர்ப்பு முழக்கங்களுக்கிடையே  குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

இதேபோன்றே விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குபடுத்தல் அதிகாரக்குழுமம் (திருத்தச்)சட்டமுன்வடிவு 2021 (Airports Economic Regulatory Authority (Amendment) Bill, 2021) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதிமுக உறுப்பினர் எம்.தம்பிதுரை இதனை ஆதரித்துப் பேசினார். இதேபோன்று ஒய்எஸ்ஆர்சிபி உறுப்பினர் விஜய்சாய் ரெட்டியும் இதனை ஆதரித்துப்பேசினார். இந்தச் சட்டமுன்வடிவானது இந்த நாட்டை விற்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா எதிர்த்துப் பேசினார்.  ஆர்ஜேடி உறுப்பினர் மனோஜ் குமார் ஜா இந்தச் சட்டமுன்வடிவின் மீது பேச முன்வந்து, பெகாசஸ் குறித்துப் பேசியதால் அடுத்த உறுப்பினரைப் பேசுவதற்கு துணைத் தலைவர் அழைத்தார்.  பின்னர் இந்தச் சட்டமுன்வடிவும் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேறியது. பின்னர் அவைநாளை (வெள்ளிக்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டது. (ந.நி.) 

;