india

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் பி.டி.ரணதிவே நினைவுநாள்......

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நவரத்தினங்களில் ஒருவரான தோழர்பி.டி.ரணதிவே கட்சியின் சித்தாந்தப் பணிகளிலும் ஸ்தாபன பணிகளிலும் அரசியல் கொள்கைகள் உருவாக்கத்திலும் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார். 1970ல் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)  துவக்கப்பட்டபோது அதன் அகில இந்திய தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தத்துவவாதி, பிரபலமான பேச்சாளர், சிறந்த எழுத்தாளர் சிஐ.டி.யுவின் அகில இந்திய தலைவர், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், கட்சியின் மத்தியக்குழு வெளியிட்ட தத்துவார்த்த மாத இதழ் ‘மார்க்சிஸ்ட்’டின் ஆசிரியர்என்று அவர் ஏராளமான பங்களிப்புகள் செய்தார்.1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசாங்கத்தின் எதேச்சதிகார ஒடுக்குமுறையை எதிர்த்து போராட கட்சிமற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு வழிகாட்டினார்.

தோழர் பி.டி.ரணதிவே, பெண்களை தொழிற்சங்க இயக்கத்தினுள் திரட்டிட இடையறாது போராடினார். உழைக்கும் பெண்கள் அமைப்புகள் உருவானதில் அவரது பங்கு தீர்மானகரமானது. போராட்டத்தின் பிரதானநீரோட்டத்தில் பெண்கள் சேரவில்லையென்றால் எந்த ஒரு தொழிலாளி வர்க்க இயக்கமோ, மக்கள் ஜனநாயக இயக்கமோ முன்னேற முடியாது; வெற்றி பெற முடியாது என்று அவர் கூறுவதுண்டு.சோவியத் யூனியனில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டபோது அதுகுறித்த ஆழமான ஆய்வுகளை பி.டி.ரணதிவே எழுதினார். “உலகில் எவர் மார்க்சியப் பதாகையை கீழே போட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை உயர்த்திப்பிடிக்கும்” எனஉறுதியோடு எழுந்த அவரது குரல் கட்சித் தோழர்களிடையேயும் சோசலிச ஆதரவாளர்களிடையேயும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ரணதிவே தன் வாழ்நாளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும், ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். அரசியல் தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த அவரது கட்டுரைகள் மார்க்சிய இலக்கிய களஞ்சியத்தில் மதிப்பு மிக்கவையாக இன்றும் உள்ளன. விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் ஆகியவற்றில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார். தவறுகளிடமிருந்து தன்னை திருத்திக் கொள்வார். அவருடைய விமர்சனங்கள் மிகவும் கூர்மையானதாக இருக்கும்.

“1989ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “தொழிலாளி வர்க்கம், சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடித்து, அனைத்து தடைகளையும் உடைத்து முன்னேறிச் செல்லும். இது நிச்சயம்” என்று சூளுரைத்தார். தொழிலாளி வர்க்கத்தினுள் ஏற்பட்டு வரும் சில மாற்றங்களை உணர்ந்து, அதற்கு ஏற்றாற்போல சங்கங்கள் தமது வேலை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என அவர் வழிகாட்டினார். இந்திய முதலாளி வர்க்கம் தனது கொள்ளை லாபத்திற்காக தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலிகளாக மாற்றி வருவதை ஆரம்பத்திலேயே இனம்கண்டார். ஒப்பந்தத் தொழிலாளர்களையும் தொழிற்சங்கம் தமது உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் சங்கம் “நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே” உள்ள குறுகிய அமைப்பாக மாறிவிடும் ஆபத்து உள்ளது என்பதை ஆழமாக சுட்டிக் காட்டினார்.இந்த வழிகாட்டுதல்தான் பின்னர்தொழிலில் உருவாகியுள்ள முறைசாராத் தன்மையை புரிந்து கொள்ளவும் அத்தொழிலாளர்களை திரட்டிடவும் வழிகாட்டுதலாக அமைந்தது எனில் மிகையல்ல. பிற்போக்கு சக்திகள், தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களை தவறான பாதையில் திரட்டுவதை தடுத்திடதொழிற்சங்கங்கள் அப்பகுதி தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வழிகாட்டினார்.

அவர் 1989 ஆம் ஆண்டு மதுரையில்ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அதுவே அவரது கடைசி உரையாகும்.1990 ஏப்ரல் 6 ஆம் நாள் அவரது வாழ்க்கைப் பயணம் நிறைவுற்றது.

பெரணமல்லூர் சேகரன்

;