india

img

போராட்டத்தின் பின்னணியில் அரசியல் கட்சிகள் எதுவுமில்லை.... உங்கள் பேச்சு முற்றிலும் தவறானது பிரதமர் அவர்களே... விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு பதில் கடிதம்...

புதுதில்லி:
தில்லி விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் எந்தவொரு அரசியல் கட்சியும் இல்லை என்று விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி, பதிலளித்துள்ளது.கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே அழிக்கும் வகையிலும் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லையை முற்றுகையிட்டு பல்வேறு மாநில விவசாயிகள் 25-வது நாளை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமையன்று மத்தியப் பிரதேச விவசாயிகளின் காணொலிக்கூட்டத்தில் பேசுகையில், ‘’புதிய வேளாண் சீர்திருத்தங்கள் ஒரே நாளில் உருவானதல்ல. விவசாயிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண இருபதாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் முயற்சி இது; ஆனால், தில்லியில் போராடும் விவசாயிகளை அரசியல் ஆதாயங்களுக்காக எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன’’ என்று கூறினார்.இதற்கு மறுப்பு தெரிவிக்கும்விதமாக தில்லி எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் சுமார் 40 தொழிற்சங்கங்களில் ஒன்றான ‘அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு’ (ஏஐகேஎஸ்சிசி) பிரதமர் மோடி மற்றும் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோருக்கு இந்தி மொழியில் தனித்தனி கடிதங்களை எழுதியுள்ளது.

இதுகுறித்து ஏஐகேஎஸ்சிசி,பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தில்லி எல்லைகளில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் எந்த அரசியல் கட்சியும் இல்லை என்பதைத் தங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் எதிர்க்கட்சிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் தவறாகக் கருதுகிறது. உண்மை என்னவென்றால் அரசியல் கட்சிகளின் கருத்துகளை மாற்றிக்கொள்ளும்படி விவசாயப் போராட்டம்தான் அவர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளது.மற்றபடி அரசியல் கட்சிகள் எங்கள் போராட்டத்தைத் தூண்டியது என்ற தங்கள் (பிரதமர்) கூற்று முற்றிலும் தவறானது.போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கங்கள் மற்றும் குழுக்களின் எந்தவொரு கோரிக்கையும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைக்கப்படவில்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;