india

img

சிக்கலான நாடுகள் பட்டியலில் இந்தியாவைச் சேர்த்த சத்தாம் ஹவுஸ்.... கடந்த 6 ஆண்டுகளில் சகிப்பின்மை, மத வன்முறை, அரசியல் பழிவாங்கல் அதிகரிப்பு....

புதுதில்லி:
உலகில் முரண்பாடான நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘சத்தாம் ஹவுஸ்’ ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்த பிறகு, இந்தியாவில் சகிப்பின்மை,மதத்தின் அடிப்படையிலான வன்முறைகள், அரசியல் எதிரிகளை பழிவாங்குதல் உள்ளிட்ட ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து விட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இங்கிலாந்து நாட்டின் நூற்றாண்டு பழமை வாய்ந்த ‘சத்தாம் ஹவுஸ்’ (Chatham House) என அழைக்கப்படும் ‘ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் அஃபயர்ஸ்’ அமைப்பு (Royal Institute of International Affairs), கடந்த ஜனவரி 11 அன்று புதிய ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.பிரெக்சிட்டிற்கு பிந்தைய இங்கிலாந்தின் வெளியுறவுக் கொள்கைகள் எந்த திசையில் செல்ல வேண்டும்என்பதற்கு வழிகாட்டும் வகையில், உலக நாடுகள் ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து, அங்கு நிலவும் அரசியல் தட்ப வெப்ப நிலைமைகளை ‘சாதம் ஹவுஸி’ன் அறிக்கை விளக்கியுள்ளது.

“குளோபல் பிரிட்டன், குளோபல் புரோக்கர்” (GlobalBritain, Global Broker) என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில்தான், ரஷ்யா, துருக்கி, சவூதி அரேபியா, இந்தியா ஆகியவை “நான்கு முரண்பாடான நாடுகள்” (‘difficult four’ countries) என வரையறுத்துக் கொடுத்துள்ளது.மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் திறனைக் கொண்ட திறந்த சமூகம் மற்றும் மக்களுக்கு உரிமைகளை மறுக்கும் சமூகங்களுக்கு அப்பால் உள்ள புதிய அணியாக இந்த நான்கு நாடுகளையும் வகைப்படுத்தி உள்ளது.அதாவது, இங்கிலாந்து தனது உலகளாவிய இலக்குகளை நோக்கி பயணிக்கும் போது இந்த நான்கு நாடுகளை ‘போட்டியாளர்களாக’ அல்லது ‘மோசமான நண்பர்கள்’ என்ற அளவிலேயே மதிப்பிட வேண்டும் என்று ‘சத்தாம் ஹவுஸ்’ பரிந்துரைத்துள்ளது.குறிப்பாக, இந்தியாவின் அரசியல் நிலைமைகள் குறித்து அலசும் அந்த அறிக்கை, “இந்தியாவின் சர்வதேசவிவகாரங்களில் தற்போது ஒரு புதிய பிளவு” ஏற்பட்டுள்ள தாக தெரிவித்துள்ளது.“மத்திய ஆளும் கட்சியான பாஜக-வின் வெளிப்படையான இந்து தேசியவாதம், முஸ்லிம்கள் மற்றும் பிறமத சிறுபான்மையினரின் உரிமைகளை பலவீனப்படுத்துகிறது. நேருவால் வடிவமைக்கப்பட்ட மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவானது, தற்போது சகிப்புத்தன்மையற்ற பெரும்பான்மைவாதத்தை நோக்கி செல்வது கவலை அளிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இரக்கம் மற்றும் சகிப்புத் தன்மையற்ற வன்முறை சம்பவங்கள்,  மதம் சார்ந்த அடக்குமுறைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியல் வேறுபாடுகளை நசுக்கும் போக்கு கடந்த 2014-இல் இருந்து அதிகரித்து வருவதாகவும்; தாராளமய ஜனநாயகத்தை இந்தியா தயக்கத்தோடு ஆதரித்து வருவதுடன், மனித உரிமை மீறல்கள் குறித்தும்தெளிவற்று இருப்பதாக ‘சத்தாம் ஹவுஸ்’ அறிக்கை மதிப்பிட்டுள்ளது.இது சர்வதேச அளவில் இந்தியா மீதான மதிப்பீடுகளில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை, மதிப்புக் குறைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், “இந்திய உள்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டே சாதம் ஹவுஸின் ‘முரண்பாடான நாடுகள்’ பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும், இந்தியா நினைத்தால், தன்மீதான விமர்சனத்தை மாற்ற முடியும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தெற்காசியாவின் சர்வதேச உறவுகள் துறை இணைப்பேராசிரியர் கேட் சல்லிவன் டி எஸ்ட்ராடா ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் எழுதியுள்ளார்.“ஐரோப்பாவின் ஏகாதிபத்திய சகாப்தத்திலிருந்து நீடிக்கும் நாகரிக மற்றும் இன ரீதியான படிநிலைகளை மாற்றியமைத்து புதுவகையான சர்வதேச பார்வையை மையப்படுத்த இந்தியா முன்வர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

;