india

img

சிபிஐயின் திருத்தப்பட்ட கையேடு வெளியீடு.... விசாரணை கால அவசாகம் குறைப்பு....

புதுதில்லி:
15 ஆண்டுகளுக்குப் பின்னர் மத்திய புலனாய்வுத்துறை யின் (சிபிஐ) விதிகள் திருத்தப்பட்டு, புதிய கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதனை மத்திய பணியாளர் - பயிற்சித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார். 

இதற்காக சிபிஐ கூடுதல்இயக்குநர் பிரவீன் சின்ஹா தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சிபிஐ அமைப்பின் முன்னாள் மூத்த அதிகாரிகளுடனும், சட்ட வல்லுநர்களுடனும், சிறப்புக்குழுவினர் ஆலோசித்து புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக மாறிவரும் குற்ற நிலப்பரப்பின் காரணிகள், ஆதாரங்களைச் சேகரித்தல், சர்வதேச விவகாரங்களைக் கையாளுதல், கிரிமினல் குற்றவாளிகளை பின்தொடர்தல் உள்ளிட்டவற்றில் புதிய அம்சங்கள் வழிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.  சர்வதேச அளவில் விசாரணை நடத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், இன்டர்போலுடன் இணைந்து விசாரணையை கொண்டு செல்லும் முறை போன்றவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக டிஜிட்டல் உலகில் விசாரணையை துரிதமாகக் கொண்டுசெல்வது, சைபர் குற்றங்களை விசாரிப்பது, அதற்கான நிலையான வழிகாட்டு நெறி முறைகள் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  சமீபத்தியசட்டங்கள், உச்சநீதிமன்ற தீர்ப்புகள், அதன் அறிவுரைகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

புதிய விதிமுறைகளின்படி, ஒரு வழக்கை விசாரிக்கும் கிளையின் உயர் அதிகாரி அந்த வழக்கை 6 மாதங்களுக் குள் விசாரித்து முடிக்க வேண்டும், மண்டல அளவில் பணிகளைக் கண்காணிக்கும் தலைமை அதிகாரி வழக்குகளை 9 மாதங்களில் முடிக்க வேண்டும். இதற்கு முன் ஓராண்டு வரை காலக்கெடு அளிக்கப்பட்டது.

;