india

img

கிளர்க் நியமனங்களில் இட ஒதுக்கீடு குறித்து ஸ்டேட் வங்கியின் விளக்கத்தில் திருப்தியில்லை..... முழு ஆய்வு தேவை என  மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

மதுரை:
ஸ்டேட் வங்கி கிளர்க் துவக்க நிலைத் தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறதா என்பது குறித்து ஸ்டேட் வங்கி அளித்திருக்கிற பதில் திருப்திகரமாக இல்லை என்றும் இதுகுறித்து முழுஆய்வு வேண்டுமென்றும், அதுவரை பணி நியமனத்தேர்வுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடாதுஎன்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்தியநிதி இணை அமைச்சர், மத்திய சமூக நீதி மற்றும்அதிகாரம் அளித்தல் அமைச்சர், பாரத ஸ்டேட் வங்கிதலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

ஸ்டேட் வங்கி பதில்
சு.வெங்கடேசன் எம். பி. இது குறித்து மத்திய நிதிஇணையமைச்சர், மத்திய சமூக நீதி- அதிகாரம் அளித்தல் அமைச்சர் ஆகியோருக்கு 22.10.2020 அன்று கடிதம் எழுதியதையொட்டி மத்திய சமூகநீதி- அதிகாரம் அளித்தல் அமைச்சர் தால்வார் சந்த்கெலாட் நிதியமைச்சகத்திற்கு அக் கடிதத்தை அனுப்பியிருந்தார். மத்திய நிதி இணையமைச்சர் அனுராக் சிங் தாக்குர் அதை ஸ்டேட் வங்கி தலைவருக்கு அனுப்பி சு. வெங்கடேசன் எம். பி.க்கு பதில்அளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார். ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் (ஊழியர் உறவு)அதற்கு பதில் எழுதியிருந்தார். 

அதில், 1) ஸ்டேட் வங்கி கிளர்க் தேர்வு, துவக்கநிலை மற்றும் இறுதி தேர்வு என இரண்டு கட்டமாகநடைபெறும். துவக்க நிலை தேர்வில் குறைந்தபட்சதகுதி மதிப்பெண்கள் கிடையாது. மதிப்பெண் கள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ளகாலியிடங்களை பொறுத்து 10 மடங்கு போட்டியாளர்கள் இறுதித் தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள்.2) அதனடிப்படையில் பொதுக் காலியிடங்கள் 171-க்கு 1713 பேரும் (கட் ஆப் - 62), ஓ. பி.சி. காலியிடங்கள் 106- க்கு 9592 பேரும் (கட் ஆப் - 62), எஸ்.சிகாலியிடங்கள் 74-க்கு 1590 பேரும் (கட் ஆப் - 62) இறுதித் தேர்வுக்காக தகுதி பெற்றுள்ளதாக பட்டியல் இட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஓ.பி.சி, எஸ்.சிபிரிவுகளில் நிறைய பேர் அந்த கட் ஆப் மதிப்பெண்களை பெற்றுள்ளதால் 10 மடங்கிற்கும் அதிகமாகமுறையே 90 மடங்குகளும், 21 மடங்குகளும் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே இட ஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

பதில் இல்லாத கேள்வி
இது குறித்து சு.வெங்கடேசன் மத்திய நிதித்துறைஇணையமைச்சர், மத்திய சமூக நீதி-அதிகாரம் அளித்தல் அமைச்சர், பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

1) “எனது கடிதத்தில் எழுப்பியிருந்த ‘கேள்வி எண்5: எத்தனை ஓ. பி சி, எஸ்.சி, எஸ்.டி, இ.டபிள்யு.எஸ்.பிரிவினர் தற்போது வெளியிடப்பட்டுள்ள பொதுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்’ என்பதற்கு பதில் இல்லை. இது மிக முக்கியமான கேள்வியாகும்.”

2) “ஸ்டேட் வங்கி தந்துள்ள பதில் இட ஒதுக்கீட்டு கோட்பாடு, இப் பட்டியல் தயாரிக்கப்படுவதில் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற எண் ணத்தை உருவாக்குகிறது.”

3) “பொதுப் பட்டியல் தயாரிக்கப்படும் போதுஎல்லாப் பிரிவு போட்டியாளர்களும் கணக்கில் கொள்ளப்பட்டு அதிக மதிப்பெண்கள் வரிசையில் அவர்களை அப்பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும். பின்னர் ஒதுக்கீட்டுப் பிரிவினர்க்கான பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும். “பொது” என்பதையே ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி போன்று தனித் தொகுப்பாக அணுகுவது தவறு. இது பொதுப்பட்டியலிலும் இடம் பெறும் உரிமையை ஓ. பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் இடமிருந்து தட்டிப் பறிப்பதுஆகும்.”

4) “ஸ்டேட் வங்கியின் பதில் கடிதத்திலேயே ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு மதிப்பெண்சலுகை இறுதி தேர்வில்தான் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த துவக்க நிலைத் தேர்வில் அந்த சலுகை வழங்கப்படவில்லை என்பதுதெளிவாகிறது.”

5) “இப்படிப்பட்ட நிலையில் பொது, ஓ.பி.சி, எஸ்.சி. பிரிவினருக்கு ஒரே கட் ஆப் மதிப்பெண் இருக்க வாய்ப்பே இல்லை. பொதுப் பட்டியல் என்பது இட ஒதுக்கீட்டு பிரிவினரை தவிர்த்ததாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதாகவே இருக்க முடியும். இது முற்றிலும் விதி மீறல் ஆகும். துவக்கநிலைத் தேர்வோ, இறுதித் தேர்வோ இட ஒதுக்கீட்டின்அடிப்படைக் கோட்பாடுகள் இரண்டிற்கும் ஒன்றே;அவை மாற இயலாது.”

சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை
6. “ஆகவே ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள தேர்வுமுடிவுகள் முழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.இட ஒதுக்கீட்டு அடிப்படை அம்சங்கள் கடைப்பிடிக்கப்பட்டு உள்ளனவா என்பதை உறுதி செய்கிற வரைபணி நியமனங்களில் அடுத்த கட்டம் நோக்கி நகராமல் இருக்க உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.”இப்பிரச்சனையில் உடனடியாக உரிய தலையீட்டை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள்,ஸ்டேட் வங்கி தலைவரை சு.வெங்கடேசன் கடிதம்மூலம் கோரியுள்ளார்.

;