india

img

மியான்மரிலிருந்து தப்பிவருபவர்களுக்கு அகதிகள் அந்தஸ்து அளித்திட வேண்டும்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.....

புதுதில்லி:
மியான்மரிலிருந்து புலம்பெயர்ந்து வரும்மக்களுக்கு அகதிகள் அந்தஸ்து அளித்து, நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மியான்மரிலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்குள் புலம்பெயர்ந்து வந்துகொண்டிருக்கும் மக்கள் குறித்து, மத்திய அரசாங்கம்அறிவித்துள்ள அறிவுரைகள் ஆழ்ந்த கவலையை அளிக்கின்றன. அவ்வாறு வருகிறவர்களை “சட்டவிரோதப் புலம்பெயர்ந்தோர்” என்று அடையாளப்படுத்தி, அவர்களைமீண்டும் நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வட கிழக்கு மாநிலங்களுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறது.இது, மியான்மரில் ஆங் சான் சுகியால்தலைமை தாங்கப்பட்ட - தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ராணுவ சதி மூலம் ஆட்சிஅதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவ ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறை வெறியாட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் தப்பித்துவரும் மக்கள் மீது மனிதாபிமானமற்ற விதத்திலும், ஜனநாயக விரோதமுறையிலும் நடவடிக்கை எடுக்கும் செயலாகும்.

மியான்மரில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராணுவத்தினரை எதிர்த்து வீரச்சமர் புரிந்துவரும் மக்கள் மீது இந்திய மக்கள்அளப்பரிய பரிவையும், ஆதரவையும் காட்டிவந்திருக்கிறார்கள்.  இத்தகைய பரிவையே இந்திய அரசாங்கம் பிரதிபலிக்க வேண்டும், தாங்கள் கொல்லப்படலாமோ என்ற அச்சத்துடன் தப்பிவரும்மக்களை “சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்” என்று கருதக்கூடாது. அவர்களுக்கு அகதிகள்அந்தஸ்து அளித்திட வேண்டும், அவர்களுக்கு மனிதாபிமான முறையில் உதவிகள் அளித்திட வேண்டும்.இவ்வாறு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)

;