india

img

ஓராண்டுக்கு முன்பே இலவச தடுப்பூசியை வழங்கியிருக்க வேண்டும்..... பிரதமரின் தாமதத்தால் உயிர்கள் போனதுதான் மிச்சம்...

 புதுதில்லி:
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இனி மாநில அரசுகள் தடுப்பூசிகளை வாங்க வேண்டியதில்லை; மத்திய அரசே அவற்றைக் கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று பிரதமர் மோடி திங்களன்று அறிவித்தார்.
இதனை பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ள அதேநேரத்தில், பிரதமர் மோடி இந்த முடிவை முன்கூட்டியே எடுத்திருந்தால், பல ஆயிரம் உயிர்கள் பறிபோனதை தடுத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

‘ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி தரப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த காலகட்டத்திற்கு உரித்தான அறிவிப்பு இது. எங்களது கோரிக்கை ஏற்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.தில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உச்சநீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள அனைத்து வயதினருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும் என்று பிரதமர் அறிவித்துள்ளதற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசு விரும்பினால், அதை நீண்ட காலத்திற்கு முன்பே செய்திருக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘இலவச தடுப்பூசி வழங்குவது தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் பலமுறை, நான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் இந்த முடிவை எடுக்க 4 மாதங்கள் ஆகியுள்ளது. கடைசியாக எங்களது குரலை பிரதமர் செவிமடுத்துள்ளார். ஆனால் துரதிருஷ்டவசமாக பிரதமர் எடுத்த தாமதமான முடிவால் பலரை இழந்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.‘18 முதல் 44 வயதுடைய மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற மாநிலங்களின் கோரிக்கையை மோடி செவிமடுக்கும் முன்பாகவே நிறைய இழப்புகளை சந்தித்துவிட்டோம். பணிவாக இருப்பது பிரதமருக்கு தீங்கு விளைவிக்காது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷூம், ‘பல தவறான முன்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டு, தற்போது ஒரு வழியாக பிரதமர் மோடி சரியான நடவடிக்கையை எடுத்துள்ளார். இதை கடந்த ஆண்டே செய்திருந்தால், கடந்த 6 மாதமாக நாம் பட்ட பெரும் சிரமத்தையும், துயரத்தையும் தவிர்த்திருக்க முடியும். அதை விட முக்கியமாக, நமக்கு போக கூடுதல் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்திருக்கவும் முடியும்’ என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் குறிப்பிட்டுள்ளனர்.

;