india

img

பிஎப் வட்டித் தொகைக்கும் மோடி அரசு வரி.... 2021-22 பட்ஜெட் அறிவிப்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது....

புதுதில்லி:
மத்திய பாஜக அரசு, பிப்ரவரி 1 அன்று 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. 

கார்ப்பரேட்டுக்களுக்கு ஆதரவான- அதேநேரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு எதிரான- இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த முக்கியமான தாக்குதல்களில் ஒன்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund - EPF) வருமானத்திற்கும் வரி விதிக்கப்பட்டதாகும்.அதாவது ஒரு ஆண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கு இனிமேல் வரி செலுத்தியாக வேண்டும்.ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது மிக சிறந்த சேமிப்பு திட்டமாக, மாதச் சம்பளதாரர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊழியர்களின் ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் இருந்து வருகிறது. ஏனெனில், ஒரு ஊழியரின் வருங்கால நலன் கருதி, ஊழியரும், நிறுவனமும் கணிசமான தொகையை, இந்த வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் பங்களிப்பு செய்கின்றனர். 

ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் குறைந்தது 12 சதவிகிதத் தொகை, வருங்கால வைப்பு நிதிக்காக கட்டாயமாக பிடித்தம் செயப்படுகிறது. இதுபோக, ஊழியர் பணிபுரியும் நிறுவனம், 12 சதவிகிதத் தொகையை செலுத்துகிறது.இந்த திட்டம் பலரையும் கவர முக்கிய காரணமே, அவர்களுக்கு இந்த சேமிப்பு திட்டத்தில் வருமான வரிச்சலுகை உண்டு என்பதே ஆகும்.ஆனால், ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கு இனிமேல் வரி விதிக்கப்படும் என்று 2021-22 பட்ஜெட்டில் அறிவித்து, நிர்மலா சீதாராமன் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிச் சலுகைகள் கிடைப்பதை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் மோடி அரசு இதைச் செய்துஉள்ளது என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் பல்வேறு வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.இபிஎப் திட்டத்தில் வட்டி சற்று அதிகமாக கிடைக்கிறது என்பதாலேயே பலரும் இதில் சேமிக்க நினைக்கின்றனர். அதோடு வரிச் சலுகையும் இருப்பதால் நல்ல முதலீட்டு திட்டமாகவும், சிறந்த சேமிப்பாகவும் பார்க்கின்றனர்.இந்நிலையில், மாதத்திற்கு 20,833 ரூபாய்க்கு மேல்- ஒரு வருடத்தில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பி.எப். பங்களிப்பு செலுத்துபவர்கள், தங்களுக்கு கிடைக்கும் வட்டித் தொகைக்கு இனிமேல் வரி செலுத்த வேண்டும் என்று 2021-22 பட்ஜெட்டில் மோடி அரசு அறிவித்திருப்பது சரியானதல்ல என்கின்றனர்.ஓய்வூதியத் தொகை அதிகரிக்க அதிகரிக்க, பிஎப் வருமானமும் அதிகரிக்கும். இதனால் செலுத்த வேண்டிய வரி விகிதமும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொள்பவர்கள் தங்களது முதலீட்டு திட்டங்களை மாற்ற முற்பட லாம்.தங்களின் சேமிப்புக்கு தாங்களே வரி செலுத்த வேண்டும் எனும்போது, யார்தான் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வார்கள்...? முதலீட்டைக் குறைக்கும் பட்சத்தில், எதிர்காலத்திற்கான ஓய்வூதியம் என்னவாகும்? இது ஓய்வூதியத் திட்டத்தையே குலைப்பதாக ஆகாதா? என்றும் கேள்விகளை எழுப்புகின்றனர்.தனிநபர்களின் அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 1,73,608-க்கும் குறைவாக இருந்தாலும், தன்னார்வ பி.எப். பங்களிப்பு செய்யும்போது,

அவர்களின் மொத்த பங்களிப்பு 2.5  லட்சம் ரூபாய்க்கு மேல் வர வாய்ப்புள்ளதால், அவர்களையும் மோடி அரசின் புதிய வரி விதிப்பு பாதிக்கும் என்று கூறும் நிதித்துறை வல்லுநர்கள், மோடி அரசின் புதிய முடிவானது, ‘ஓய்வூதிய சேமிப்பு இருக்கிறது; பிற்காலத்தில் நமக்கு அது நன்மையளிக்கும்’ என்று எண்ணியிருந்த ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது; இது சேமிப்பு மற்றும் முதலீடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.யூலிப் திட்டத்திற்கும், வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக செய்யப்படும் முதலீட்டிற்கும், மோடி அரசு மூலதன ஆதாய வரி விதித்துள்ளது. பங்குகள் கடன் மற்றும் பணச் சந்தையில் முதலீடு செய்யப்படும் இந்த திட்டத்தில் செலுத்தப்படும் பிரீமியம், 2.5 லட்சத்தினை தாண்டினால் வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த புதிய வரி விதிப்புகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கும் வரவுள்ளன.

;