india

img

எங்களைத் தாக்கியது குண்டர்கள்தான், விவசாயிகள் அல்ல! - காயமடைந்த தில்லி காவலர்கள்

தில்லி, ஜன.29
தில்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையின்போது காயமடைந்த காவலர்கள் ''எங்களைத் தாக்கியது குண்டர்கள்தான், விவசாயிகள் இல்லை'' என்று  தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை போராட்டக்களத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசுடனான அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர்.

இப்பேரணி, அனுமதி வழங்கப்பட்ட பாதையில் அமைதியாக  சென்றுகொண்டிருந்தது. திடீரென பேரணியிலிருந்த சிலர் பேரணியின் பாதையிலிருந்து விலகி செங்கோட்டை நோக்கிச் சென்றனர். இதனால் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது.

இந்த வன்முறையில் விவசாயிகள் மற்றும் காவலர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 25 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இந்த வன்முறையில் காயமடைந்த காவலர்கள் "எங்களைத் தாக்கியது குண்டர்கள்தான், விவசாயிகள் இல்லை" என்று கூறியுள்ளனர்.

இந்த வன்முறை குறித்துப் பாதிக்கப்பட்ட டெல்லி காவல்துறை துணை ஆணையர் ஜொகீந்தர் ராஜ் கூறுகையில், "எனது பணிக் காலத்தில் நான் பல்வேறு கலவரங்களையும், போராட்டங்களையும் சந்தித்துள்ளேன். ஆனால், இந்த வன்முறை போன்று ஒன்றைப் பார்த்தது கிடையாது. என் முதுகு, தோள்பட்டை, கைகள் என்று என்னைக் கொடூரமாகத் தாக்கினர். என்னை வாளால் வெட்டவும் முற்பட்டனர். அந்த இடத்திலிருந்து நான் தப்பித்தேன். எங்கள்மீது தொடர்ந்து கற்களைக் கொண்டு தாக்கினர்" என்று கூறியுள்ளார்.

மேலும், வன்முறையின்போது செங்கோட்டையில் சீக்கியர்களின் கொடியை ஏற்றியதை நடிகர் தீப் சித்து ஒப்புக் கொண்டுள்ளார். 
இவர் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட இந்தி நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சன்னி தியோலுடன் தீப் சித்து இருக்கும் புகைப்படமும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தீப் சித்து பாஜகவைச் சேர்ந்தவர்தான் என்று விவசாய சங்கத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கும், விவசாயிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விவசாயிகள் பேரணியில் சமூகவிரோதிகள் மற்றும் பாஜக குண்டர்கள்தான் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டதாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

;