india

img

தென்னிந்தியாவிற்கு உதவும் வகையில் தேசிய மருந்துசார் கல்வி-ஆராய்ச்சிக் கழகம் மதுரையில் அமைத்திடுக.... ஒன்றிய அமைச்சரிடம் எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக் தாகூர் நேரில் கோரிக்கை...

புதுதில்லி:
மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் அமைக்க வேண்டும் என்று ஒன்றியஉரம்-இரசாயனத் துறை  அமைச்சர்  சதானந்த கவுடாவிடம்  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும்  விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் ஆகியோரில் நேரில் சந்தித்து கோரிக்கை முன்வைத்தனர்.

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 1998இல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி ‘தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (NIPER)’ ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும்.மருந்துசார் அறிவியலில் மேம்பட்ட படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்காக ஒரு சிறப்பு மையத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மருந்துசார் அறிவியலில் முதல் தேசிய அளவிலான கழகமாக உருவாக்கப்பட்டது தான் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (NIPPER). இந்திய அரசு, தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை ஒரு “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக” பிரகடனப்படுத்தி யுள்ளது. இது இந்திய அரசின் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துசார் துறையின் கீழ் அமைக்கப் பட்டுள்ள ஒரு தன்னாட்சி அமைப் பாகும். இது இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்குச் சமமான அந்தஸ்தை கொண்டதாகும். மருந்துசார் அறிவியலில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒரு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தர அடையாளத்துடன் உருவாக்கும் ஒரு பார்வையுடனும், மருந்துசார் தொழில் வளர்ச்சிக்காகவும், இந்திய மக்களின் நலனுக்காகவும் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை உருவாக்குவது கட்டாயமாகும்.

தற்போது நாடு முழுவதும் 7 தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்கள் உள்ளன.முதல் கழகம் 1998இல் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு மற்ற 6 கழகங்கள் 2007 லிருந்து 2008 காலத்தில் அகமதாபாத், கௌஹாத்தி, ஹைதராபாத், ஹாஜிபூர் (பீகார்),கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் துவக்கப்பட்டன.ஜனவரி 20, 2011 அன்று நடைபெற்ற எட்டாவது நிதி ஆணையத்தின் கூட்டத்தில் இதர 5 கழகங்களுடன் மதுரையில் ஒரு தேசியமருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை உருவாக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. செப்டம்பர் 13, 2011 இல் நடைபெற்ற மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கூறிய கழகங்களை அமைப்பதற்கான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் வழங்கியது.எட்டாவது நிதி ஆணையம் வழங்கிய செல்லுபடியாகும் நீட்டிப்பை செலவினங்கள் துறை ஜூன் 13, 2016 தேதியிட்ட அலுவலகக்குறிப்பாணையில் ஒப்புதல் அளித்துள்ளது. மார்ச் 26, 2018 அன்று நடைபெற்ற எட்டாவது நிதி ஆணையத்தின் கூட்டத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களில் புதிய தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிகழகங்கள் அமைப்பது பற்றி மறு ஆய்வு செய்யப்பட்டது.

எட்டாவது நிதி ஆணையத்தின் காலமான 2020-25இல் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தை மதுரையில் துவக்க முடிவுசெய்யப்பட்டது. தற்போது தென்னிந்தியாவில் இது போன்ற முதன்மையான ஆராய்ச்சிக் கழகம் இல்லாதநிலையில் மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை துவக்குவது பொதுவாக இந்தியாவிற்கும், குறிப்பாக தென்னிந்தியாவிற்கும் உதவிடும்.தமிழக அரசு மதுரையில் தேசியமருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் அமைப்பதற்கென 116 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஏற்கனவே வழங்கியுள்ளது. மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் மாணவர் சேர்க்கையினைத் துவக்கும் வகையில், ஒன்றிய உரம் மற்றும்இரசாயனத் துறை அமைச்சகம் முடிவெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர் சேர்க்கை துவக்கி னால், பயிற்றுவிப்பதற்கான தற்காலிக கட்டிடங்களை நாங்கள்பெற்றுத்தருகிறோம் என்றும் கூறினர். இது பற்றி ஒன்றிய அமைச்சர் சதானந்த கவுடா, உடனே துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து பேசுவதாகவும், தொடர்ந்து துறைஅதிகாரிகள் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டுவதாகவும் கூறினார்.

;