india

img

வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி ரத்து செய்... போராடும் விவசாயிகளுக்கு முழு ஆதரவு... இடதுசாரிக் கட்சிகள் அறிவிப்பு....

புதுதில்லி:
மத்திய வேளாண் சட்டங்களைரத்து செய்யக்கோரி போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்- லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரத பிஸ்வாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் விவசாயிகளால் நடத்தப்பட்டுவரும் மாபெரும் கிளர்ச்சிப் போராட்டங்களுக்கு இடதுசாரிக் கட்சிகள் தங்களுடைய முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கின்றன.  நாடாளுமன்றத்தில் மிகவும் நாணமற்ற விதத்தில் ஜனநாயக விரோதமான முறையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார சட்டமுன்வடிவையும் திரும்பப் பெற வலியுறுத்தியும் தில்லி முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் அணிதிரண்டு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.கடும் குளிர்  தில்லியை வாட்டிக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், அரசின் கொடூரமான அடக்குமுறைகளையும் வீரத்துடன் எதிர்கொண்டு, லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லிக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். எனினும், அவர்கள் அரசு முன்பு கூறிய உறுதிமொழியின்படி,  நாடாளு மன்றத்திற்கு வருவதற்கு அனுமதிக் கப்படவில்லை.

இடதுசாரிக் கட்சிகள் சார்பில், தங்கள் கிளைகள் அனைத்திற்கும், போராடிக் கொண்டிருக்கும் விவ சாயிகளுக்கு ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கும் விதத்தில், ஆங்காங்கு ஸ்தலமட்டத்தில் உள்ளசூழ்நிலைகளுக்கேற்ப, கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.   விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறைகூவல்களுக்கும் ஆதரவினை அளித்திட வேண்டும்.இடதுசாரிக் கட்சிகள், இந்திய விவசாயத்தையும், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பையும், விவசாயிகளுக்கு விவசாய விளைபொருள்களுக்குக் கட்டுபடியாகக் கூடிய விதத்தில் குறைந்தபட்ச ஆதாரவிலை அளித்திடவும், செயற்கை யாக உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கவும், அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வைத் தடுக்கவும் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளைப் பாதுகாத்திடவும் அவர்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுக்க வேண்டும் என்று பிரதமரையும், மத்திய அரசாங்கத்தையும் கேட்டுக் கொள்கின்றன. இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.       (ந.நி.)

படக்குறிப்பு  : திக்ரி எல்லையில் விவசாயிகளுடன் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.ராகேஷ்

;