india

img

மத்திய சுகாதாரத் துறையே... தூக்கத்திலிருந்து எழுந்திரு... கொரோனா தீவிரத்தை மறைத்து இன்னும் எவ்வளவு பேரைக் கொல்வீர்கள்...? மோடி அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் பகிரங்க கடிதம்.....

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்றின் 2-ஆவது அலைகளை கையாள்வதில் மத்திய சுகாதார அமைச்சகம், தூங்கி வழிவதாகவும், பொருத்தமற்ற நடவடிக்கைகளை கையாண்டு வருவதாகவும் இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association) பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுப் பாதிப்பு நாளொன்றுக்கு 4 லட்சத்து ஆயிரத்து 78 ஆகவும், உயிரிழப்போர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 187 ஆகவும் உயர்ந்துள்ள நிலையில், இந்தியமருத்துவ சங்கம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு நீண்ட கடிதம் ஒன்றை, கடந்த சனிக்கிழமையன்று எழுதியுள்ளது. அதில் இதுதொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:

கொரோனா தொற்றுநோயின் பேரழிவு தரும் இரண்டாவது அலை ஏற்படுத்தியுள்ள வேதனையான நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் சுகாதார அமைச்சகத்தின் தீவிர சோம்பல் மற்றும் பொருத்தமற்ற நடவடிக்கைகள், இந்திய மருத்துவ சங்கத்திற்கு (IMA) ஆச்சரியத்தை அளிக்கிறது.கொரோனா உச்சத்தில் உள்ள நிலையில், நாடு முழுவதும் சரியான- திட்டமிடப்பட்ட முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என, கடந்த 20 நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், ஐஎம்ஏ மற்றும் பிற தொழில்முறை மருத்துவ வல்லுநர்களின் செயல்திறன் மிக்க அறிவாற்றல் சார்ந்த அந்த கோரிக்கைகள், நாட்டிலுள்ள கள நிலவரத்தை உணராமல் முடிவெடுப்பவர்களால் (மத்திய ஆட்சியாளர்களால்) குப்பைத் தொட்டியில் போடப்பட்டுள்ளது.இதன் காரணமாகவே நாளொன் றுக்கான கொரோனா தொற்றுப் பாதிப்பு நான்கு லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல மிதமானது முதல் தீவிர கொரோனா பாதிப்பு உடையவர்களின் எண்ணிக்கையும் 40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

இரவு ஊரடங்கால் எவ்வித பலனும் ஏற்படவில்லை. கடந்த 20 நாட்களில் சில மாநிலங்களில் மட்டும் 10 முதல் 15 நாட்கள் வரை பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நாடு தழுவிய பொதுமுடக்கம்தான் இந்த அழிவுகரமான கொரோனா தொற்றுப் பரவலின்சங்கிலியை உடைக்கும். இடைவிடாத கொரோனா பணிகளுக்கு இடையே, சுகாதார அமைப்புகள் மற்றும் மருத்துவர்கள் சற்று மூச்சுவிட்டுக் கொள்வதற்கும், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பாக இருக்கும்.“பொருளாதாரத்தை விட வாழ்க்கை விலைமதிப்பற்றது” என்பதை மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

அதேபோல, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விரைவாக தடுப்பூசிசெலுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம். துரதிர்ஷ்டவசமாக அதிலும் போதிய தடுப்பூசி இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது. தொற்றுநோய் தடுப்புக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 35 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருந்தாலும், நாடு தழுவிய இலவச தடுப்பூசிக்கு அதனை வழங்கவில்லை.. 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களை ‘மாநில அரசாங்கங்களின் தயவின் கீழ்’ மத்திய அரசு விட்டுள்ளது.1997 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில், இலவச தடுப்பூசியை ஏற்றுக் கொண்டதன் மூலம் மட்டுமே சின்னம்மை மற்றும் போலியோ ஒழிப்பைஇந்தியாவால் அறிவிக்க முடிந்தது. மாறாக, வேறுபட்ட விலை முறையால் அல்ல. மேலும், வேறுபட்ட தடுப்பூசிவிலை நிர்ணய முறையே அடிப்படையில் மனிதாபிமானம் அற்றது. நாட்டில்இருக்கும் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசியை வழங்கினால் மட்டுமே கொரோனா 3-ஆவது அலைக்கு தயாராக முடியும். 

அதேபோல, மருத்துவ ஆக்சிஜனின் நெருக்கடி ஒவ்வொரு நாளும் ஆழமடைந்து வருகிறது. நமது நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி போதிய அளவில் இருக்கிறது. எனினும் அவற்றை சரியான முறையில் விநியோகம் செய்வதில் காட்டிய அலட்சியத்தாலேயே இன்றுபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பிரச்சனைகள் மேலும் தீவிரமடையும் முன் இதற் கான தீர்வுகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவது மற்றொரு பிரச்சனையாகும். நாட்டிலுள்ள அனைத்து சுடுகாடுகளும் பிணங்களை எரிக்க முடியாத அளவிற்கு நிரம்பியுள்ளன. ஆனால், நாட்டிலுள்ள முக்கிய மருத்துவமனைகள், நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளை கொரோனா அல்லாத மரணங்களாகப் பதிவு செய்து கொண்டிருக் கின்றன. ஏன் இவ்வாறு உண்மையை மறைக்க வேண்டும்?

ஆர்டி-பிசிஆர் (RT-PCR) எனப்படும் எதிர்மறை பரிசோதனை செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. நேர்மறையான முடிவுகளைக் காட்டும் சிடி ஸ்கேன் (CT Scan) பரிசோதனை செய்த நோயாளிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை.முதல் அலையில் 756 மருத்துவர்களையும், இரண்டாவது மருத்துவத்தில் 146 பேர்களையும் இழந்து விட்டோம் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.உண்மையான மரணங்கள் பற்றி மக்களுக்குத் தெரிந்தால் மட்டுமே, அது கொரோனா தொற்று பற்றிய எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும்.எனவே, மத்திய சுகாதாரத் துறை, சோம்பலை முறித்து தூக்கத்திலிருந்து உடனடியாக எழுந்திருக்க வேண்டும். கொரோனா தொற்றால் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஐஎம்ஏ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

;