india

img

செயற்கையாக உருவாக்கப்பட்ட தடுப்பூசி சாதனை? ஒரே நாளில் அம்பலப்பட்டுப் போனது நரேந்திர மோடி அரசு..

புதுதில்லி:
இந்தியாவில் ஒரேநாளில் 86 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்தி, பிரதமர் நரேந்திர மோடி உலக சாதனை படைத்து விட்டதாக, பாஜக தலைவர்கள் கூவிக் கொண்டிருக்கும் நிலையில், இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட சாதனை என்றும், மோடியின் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்காக செய்யப் பட்ட ஏமாற்று வேலை என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

கொரோனா 2-ஆவது அலைக்கு,பல லட்சம் இந்தியர்களைக் காவுகொடுத்த மோடி அரசு, மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சிகள், ஊடகங்களின் கடும் விமர்சனம் மற்றும் மக்களின் போராட்டங்களுக்குப் பணிந்து,தனது நிலையிலிருந்து இறங்கி வந்தது.கடந்த ஜூன் 7-ஆம் தேதி தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒன்றிய அரசேதடுப்பூசிகளை கொள்முதல் செய்து,அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று அறிவித் தார். இந்த திட்டம் ஜூன் 21 அன்று துவங்கும் என்றும் கூறினார். 

அதன்படி, திங்களன்று நாடுமுழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கும் பணிதுவங்கியது. முதல் நாளில் மட்டும்86 லட்சத்து 16 ஆயிரத்து 373 பேருக்குதடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுஒரு உலக சாதனையாக கூறப்பட்டது.ஆனால், இவ்வாறு கூறிய மறுநாளே 54 லட்சம் அளவிற்கு தடுப்பூசிசெலுத்தப்படுவோரின் எண்ணிக்கைகுறைந்ததும், குறிப்பாக முதல் நாளில் சாதனை படைத்த பாஜகஆளும் ம.பி. மாநிலம் இரண்டாவதுநாளில் 0.3 சதவிகிதம் என்ற அளவில்தரைமட்டத்திற்கு போனதும், பிரதமர் மோடியின் தடுப்பூசி சாதனைமீது சந்தேகங்களை ஏற்படுத்தியுள் ளது.பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில், ஜூன் 15 அன்று 37 ஆயிரத்து 904 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதே ஒரு நாளின் அதிகபட்ச சாதனை அளவாக இருந்தது. ஆனால், ஜூன் 21 அன்று ஒரே நாளில் மட்டும்16 லட்சத்து 95 ஆயிரத்து 592 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக மத்திய பிரதேச அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு மறுநாளே (ஜூன்22) வெறும் 4 ஆயிரத்து 842 டோஸ் கள் அளவிற்கு தரைமட்டத்திற்கு ம.பி. மாநிலம் வீழ்ந்துள்ளது. இது திங்கட்கிழமை செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையில் 0.3 சதவிகிதம் மட்டுமே ஆகும். ஜூன் 21 தேதிக்கு முந்தைய நிலையும் இதுவாகவே இருந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 4 ஆயிரத்து 098 பேருக்குமட்டுமே தடுப்பூசிகள் போடப்பட் டுள்ளன.எனவே, பிரதமர் மோடியின் சாதனைக்காக, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ம.பி. பாஜக அரசு,மக்களின் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தடுப்பூசிகளை நீண்டநாட்களாக பதுக்கிவைத்து, அவற்றை ஒரேநாளில் செலுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ம.பி. மாநிலம் மட்டுமல்லாமல், பாஜக ஆளும் ஹரியானா, கர்நாடக மாநிலங்களிலும் இதேபோல நடந்துள்ளது. திங்களன்று 5.45 லட்சம்டோஸ்களை செலுத்திய மனோகர்லால் கட்டார் தலைமையிலான ஹரியானா பாஜக அரசு, செவ்வாயன்று வெறும் 76 ஆயிரம் பேருக்குமட்டுமே தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இது முதல்நாளை விட 85 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜக அரசு, திங்களன்று 11 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகளை செலுத்தியது. இதுவும் செவ்வாய்க்கிழமை 3 லட்சத்து 95 ஆயிரமாக குறைந் துள்ளது.

குஜராத், அசாம் மாநிலங்களில் பெரிய வித்தியாசம் இல்லாவிட்டாலும், ஒப்பீட்டளவில் திங்கட்கிழமையை விட செவ்வாய்க்கிழமையன்று குறைவான நபர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் திங்களன்று 5 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி, செவ்வாய்க்கிழமை 4 லட்சத்து 27 ஆயிரம் என்றும், அசாமில் திங்களன்று 2 லட்சத்து 74 லட்சம்டோஸ்கள் செலுத்தப்பட்டது, செவ்வாயன்று 2 லட்சத்து 49 ஆயிரம் என்றும் குறைந்துள்ளது. திங்களன்று 8.21 லட்சம் டோஸ்களை வழங்கிய உத்தரப்பிரதேசத்தில், செவ்வாயன்று அதன் அளவு 7.68 லட்சம் டோஸ்களாக குறைந் துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியோடுஅனுசரித்துப் போகும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு, ஜூன் 15 அன்று 81 ஆயிரத்து 695 தடுப்பூசிகளை செலுத்தியதே, ஒருநாளில்ஆந்திராவின் அதிகபட்ச சாதனையாக பதிவு செய்திருந்தது. ஆனால்,மோடியின் அறிவிப்பையொட்டி, ஒரு ‘சாதனை’யை உருவாக்கப் பாடுபட்டு, ஞாயிற்றுக்கிழமை 13.74 லட்சம் டோஸ்களை வழங்கியுள்ளது. எனினும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வெறும் 40 ஆயிரம் என்ற அளவிலேயே தடுப்பூசி செலுத்தியுள்ளது. பாஜக ஆட்சியில் இல்லாத பெரிய மாநிலங்களின் நிலைமை இவ்வாறாக இல்லை. வழக்கமான ஏற்ற - இறக்கங்களுடன் அவை தடுப்பூசிகளை வழங்கியுள்ளன. இலவச தடுப்பூசி திட்டம் துவங்கியதிங்களன்று 3.87 லட்சம் தடுப்பூசிகளை செலுத்திய மகாராஷ்டிர அரசு,அதற்கு மறுநாள் 5 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி, பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து வேறுபட்டுள்ளது. கேரளா திங்களன்று 2.63 லட்சம் டோஸ்களைவழங்கியது என்றால், செவ்வாய்க் கிழமை 2.30 லட்சம் டோஸ்களையும், மேற்கு வங்கம் முதல்நாளில் 3.34 லட்சம் டோஸ்களையும், இரண்டாவது நாளில் 3.01 லட்சம் டோஸ்களையும் வழங்கியுள்ளன. தெலுங்கானா இரண்டு நாட்களிலும் சுமார் 1.5 லட்சம் டோஸ்களை வழங்கியுள்ளது.

;