india

img

அம்பானி துவங்கும் கச்சா எண்ணெய் தொழிற்சாலை... அபுதாபியில் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்குமாம்...

புதுதில்லி:
முகேஷ் அம்பானி தலைமையி லான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சில்லரை வர்த்தகம் மற்றும் டெலிகாம் துறை வர்த்தகத்தில் போதுமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. 2020 கொரோனா முதல் அலைகாலத்திலும்கூட சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை அள்ளிக் குவித்தது.தற்போது 2021-இல் கொரோனா 2-ஆவது அலையால், இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், கச்சா எண்ணெய் சார்ந்த வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் அடுத்தகட்ட திட்டத்தில் இறங்கியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே, அபுதாபி நாட்டின் அரசு கச்சா எண்ணெய் நிறுவனமான ‘அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி’ (ADNOC) உடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தது. அதனைத்தான் தற்போது செயல்படுத்த முடிவு செய்துள்ளது.‘அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி’-யின் (ADNOC) எண்ணெய்தளம் அமைந்திருக்கும் அல் ருவாய்ஸ் பகுதியில், எத்திலீன் டைக்ளோரைடு தயாரிக்க ஒரு புதிய தொழிற்சாலை அமையவுள்ளது. இந்த புதிய தொழிற்சாலைத் திட்டத்தில்தான், அபுதாபி அரசு கச்சா எண்ணெய் நிறுவனமான அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனியுடன் (ADNOC) முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூட்டணி சேர முடிவெடுத்துள்ளது.இப்புதிய எத்திலீன் டைக்ளோரைடு தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க இரு தரப்பும் சுமார் 1.2 முதல் 1.5 பில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. வளைகுடா நாடுகளிலேயே மிகப்பெரிய எண்ணெய் தளம் கொண்டதாக அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி உள்ளது. இந்த மாபெரும் எண்ணெய் தளத்தில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூட்டணி முறையில் புதிய தொழிற்சாலையை அமைக்கிறது. 

அதேபோல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் 1.2 முதல் 1.5 பில்லியன் டாலர் முதலீடுதான் இப்பகுதியில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று செய்துள்ள அதிகப்படியான முதலீடு என்று கூறப்படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து சுமார் 15 முதல் 25 சதவிகிதம் வரையிலான பங்குகளைச் சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ-விற்கு விற்பனை செய்யசில வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் குழுமத்திற்குப் புதிதாக 1.25 லட்சம்கோடி ரூபாய் முதல் 1.50 லட்சம் கோடி ரூபாய் வரையில் முதலீடு மிக எளிதாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய அங்கமாக இருந்துவந்த  ஓய்.பி. திரிவேதி, ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், அவரது இடத்தில் அராம்கோ-வின் தலைவர் யாசி அல் ருமேயான் இணைந்துள்ளார். இதன்மூலம் ரிலையன்ஸ் குழுமத்தின் எண்ணெய் வர்த்தகம் மிகப்பெரிய அளவிற்கு வளர்ச்சி பெறும் என்று முகேஷ் அம்பானி கணக்குப் போட்டுள்ளார். அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் வர்த்தகம் 2 மடங்கு வளர்ச்சி அடையும் என்பது அவரது கணக்காக உள்ளது.

இதனிடையே முகேஷ் அம்பானி அமைக்கும் எத்திலீன் டைக்ளோரைடு தயாரிப்பு தொழிற்சாலை மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் கணக்கு ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியர்களுக்கும் அதிகளவில் வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும்? வேலை அபுதாபியிலா.. இந்தியாவிலா? என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

;