india

img

தமிழகத்துக்கு 33 டிஎம்சி தண்ணீர்... கர்நாடக அரசுக்கு நதிநீர் ஆணையம் உத்தரவு....

புதுதில்லி:
தமிழகத்துக்கு 33 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீர் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ஒன்றிய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12-வது ஆலோசனைக் கூட்டம்   ஜூன் 25 அன்று நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு  காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.கல்தார் தலைமை வகித்தார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீர் குறித்து பேசப்பட்டது. கூட்டத்தில் மேகதாது அணை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பக்கட்ட பணியும் மேற்கொள்ளக்கூடாது என தமிழ்நாடு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான  33 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. 

;