india

img

இன்று நாடாளுமன்றத்தில் நாளை நாடெங்கும்! - சு.வெங்கடேசன் எம்.பி

இன்று நாடாளுமன்றத்தில் நடப்பதே நாளை நாடெங்கும் நடக்கும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி நாளிதழான 'தி இந்து' வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், மக்களவையில், கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை 144 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் அரசின் 10 ஆண்டுக்கால ஆட்சியில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 2014-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையிலான பாஜக அரசின் ஆட்சியில் 94 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சியில், காங்கிரஸ், அதிமுக மற்றும் தெலுங்கு தேச கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், ஆனால் ஒரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கூட இடைநீக்கம் செய்யப்படவில்லை. 
அதேபோல் மாநிலங்களவையில், கடந்த 2006-ஆம் ஆண்டும் முதல் 2023-ஆம் ஆண்டு வரை, 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் போது கடந்த 2010-ஆம் ஆண்டு 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 2020-ஆம் ஆண்டிலிருந்து பாஜக ஆட்சியில், 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாஜக ஆட்சியில் எம்பிக்கள் இடைநீக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இன்று நாடாளுமன்றத்தில் நடப்பதே நாளை நாடெங்கும் நடக்கும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது:
”பாஜக ஆட்சியில் எம்பிக்கள் இடைநீக்கம் இரண்டு மடங்கு அதிகரிப்பு. எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஒரு முறை கூட பிரதமர் பதில் சொன்னதில்லை.
அதாவது, கேள்வி கேட்பவர்களை வெளியேற்றுவோம். பதில்களை அனுமதிக்க மாட்டோம். இது தான் பாஜக. இன்று நாடாளுமன்றத்தில் நடப்பதே நாளை நாடெங்கும் நடக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.