india

img

அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப உடனடி நடவடிக்கை... கேரள முதல்வர் உறுதி...

திருவனந்தபுரம்;
பிஎஸ்சி தரவரிசைப் பட்டியலில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்புவதே அரசாங்கத்தின் கொள்கை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதற்கு அரசு, சட்டமன்றம், பொது சேவை ஆணையம் ஆகியவை உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

கேரள சட்டமன்றத்தில் வியாழனன்று எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து முதல்வர் மேலும் பேசியதாவது: 

கோவிட் பரவலைத் தொடர்ந்து, தேர்வாணையத்தால் சரியான நேரத்தில் போட்டித் தேர்வுகளை நடத்த முடியவில்லை. இருப்பினும், இது காலியிடங்களை தெரிவிப்பதையோ நியமனங்களின் பரிந்துரையையோ பாதிக்காது. மேலும், 05.02.2021 முதல் 03.08.2021 வரை காலாவதியாகும் பல்வேறு தரவரிசைப் பட்டியல்களின் செல்லுபடி யாகும் காலம் 04.08.2021 வரை நீட்டிக்கப்பட்டது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல்கள் காலாவதியாகும் நிலையில், அதுவரை உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் பிஎஸ்சி-க்கு தெரிவிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும், இந்த நோக்கத்திற்காக செயலாளர்கள் கூட்டத்தை கூட்டவும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. காலியிடங்களைத் தெரிவிக்கத் தவறும் துறைத் தலைவர்கள் மற்றும் நியமன அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மூப்பு (சீனியாரிட்டி) தகராறு, பதவி உயர்வு தகுதி இல்லாதது, நீதிமன்ற வழக்குகள் மற்றும் நுழைவு கேடரில் உள்ள காலியிடங்கள் ஆகியவற்றால் வழக்கமான பதவி உயர்வு தடைபட்டுள்ளவற்றை கண்டு பிடித்து, தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவிற்கு அறிக்கை அளிக்குமாறு துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துறைத் தலைவர்கள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இதன் அடிப்படையில், மூப்புத் தகராறு நிலவும் வழக்குகளில் தற்காலிக பதவி உயர்வுக்காக நீதிமன்றம் / தீர்ப்பாயத்தால் இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் வழக்கமான பதவி உயர்வு பெறவும், அதன் விளைவாக காலியிடங்களை பிஎஸ்சி-க்கு தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு பதவியில் பதவி உயர்வுக்கான காலியிடங்கள் இருந்து, பதவி உயர்வுக்கு தகுதியான நபர்கள் இல்லாதிருந்தால், அந்த பதவிகளின் தரவரிசை பட்டியல் தற்காலிகமாக தற்போதுள்ள பணியாளர்களுக்கு தரம் இறக்கப்படும். மேலும் இதுபோன்ற காலியிடங் களை பிஎஸ்சி-க்கு தெரிவிக்க உத்தர விடப்படுகிறது.அனைத்து காலியிடங்களையும் துல்லியமாகவும் சரியான நேரத்திலும் தெரிவிக்கஒரு ஆன்லைன் அமைப்பு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக விஜிலென்ஸ் காலியிடங்களை தெரிவிப்பதன் துல்லியத்தை சரிபார்க்க பல்வேறு அலுவலகங்களில் ஆய்வுகளை நடத்துகிறது.

மேலும், காலியிடங்கள் துல்லியமாகத் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சிவில் சர்வீஸ் சீர்திருத்தத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அடங்கிய குழு தலைமைச் செயலாளரின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டது. முந்தைய எல்டிஎப் அரசாங்கத்தின் போது, சுகாதாரம் மற்றும் காவல்துறை போன்ற பல்வேறு துறைகளில் 20,000 க்கும் மேற்பட்ட புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. 25.05.2016 முதல் 19.05.2021 வரை, பிஎஸ்சி 4,223 தரவரிசைப் பட்டியல்களை வெளியிட்டது. அதற்கு முந்தைய யுடிஎப் ஆட்சியின் போது, 3,418 தரவரிசை பட்டியல்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. 

கடந்த எல்டிஎப் அரசாங்கத்தின் போது, 1,61,361 நியமனங்கள் செய்யப்பட்டன. அதற்கு முந்தைய யுடிஎப் அரசாங்கம் 1,54,384 நியமனங்களை பரிந்துரைத்தது, ஆனால் அவர்களில் 4,031 பேருக்கு எல்டிஎப் அரசாங்கத்தால் நியமனம் வழங்கப்பட்டது.பி.எஸ்.சி மூலம் முடிந்தவரை நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும். கோவிட் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பிஎஸ்சி தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் கோவிட் பரவலின் தீவிரம் குறைந்தவுடன் மீண்டும் தொடங்கப்படும். தற்போதுள்ள காலியிடங்களை தெரிவிக்க வேண்டாம், தரவரிசைப் பட்டியல்களின் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை அல்ல. தரவரிசைப் பட்டியலில் இருந்து காலியிடங்கள் அனைத்தையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் கால அளவை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் முதல்வர் கூறினார்.

;