india

img

உதய்பூர் படுகொலை: குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பாஜகவின் சிறுபான்மை பிரிவில் சேர முயன்றுள்ளனர் – இந்திய டுடே ஆய்வில் தகவல்

தய்பூரில்  தையல்காரரான கண்ணையா லாலை கொலை செய்த  ரியாஸ் அட்டாரி மற்றும் முகமது கௌஸ் ஆகியோர் கடந்த காலங்களில் பாஜகவில் சேர முயன்றுள்ளனர் என்று இந்திய டுடே ஆய்வில் தெரியவந்துள்ளது.

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை பாஜகவின் முன்னாள் செய்திதொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து நுபுர் சர்மா பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவளித்த உதய்பூரைச் சேர்ந்த கண்ணையா லால் டெலி என்பவர் ஜூன் 28 அன்று மாலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கண்ணைய்யா லால் டெலி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது கடைக்குள் நுழைந்த இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் கண்ணையாவின் கழுத்தை வெட்டி படுகொலை செய்தனர். அந்த நேரத்தில், கொலைக்கான காரணத்தை விளக்கி கொலையாளிகளான முகம்மது ரியாஸ் அன்சாரியும், முகம்மது கவுஸும் காணொளி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உதய்பூர் கொலையாளிகள் கடந்த 3 ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநில பாஜகவின் சிறுபான்மை பிரிவில் சேருவதற்கு முயன்றுள்ளனர் என்று இந்தியா டுடே ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் புனித யாத்திரை முடிந்து திரும்பிய பின்னர் அவரை உதய்பூர் கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அட்டாரியை ராஜஸ்தானில் உள்ள பாஜகவின் சிறுபான்மை பிரிவின் உறுப்பினரான இர்ஷாத் செயின்வாலா வரவேற்கும் புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநில பாஜகவுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இர்ஷாத் செயின்வாலா உறுப்பினராக உள்ளார். அவரை நேரில் சந்தித்து இந்தியா டுடே விசாரித்த பொழுது, “உதய்பூரில் நடந்த பாஜக நிகழ்ச்சிகளில் ரியாஸ் அட்டாரி கலந்து கொண்டார் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்” என்று இந்தியா டுடே கூறியுள்ளது.

ராஜஸ்தான் பாஜக தலைவர் குலாப் சந்த் கட்டாரியாவின் பல நிகழ்ச்சிகளில் ரியாஸ் அட்டாரி கலந்து கொண்டுள்ளார். அவர் அடிக்கடி அந்த நிகழ்ச்சிகளில் அழைக்கப்படாமலே கலந்து கொள்வார். அவர் தானாக வருவார். கட்சியுடன் இணைந்து பயணிப்பதாக கூறுவார் என்று இர்ஷாத் செயின்வாலா தெரிவித்துள்ளார்.

பாஜகவில் சேர முயன்றாலும் தனிப்பட்ட முறையில் தன் நண்பர்களிடம் பேசும் பொழுது ரியாஸ் அட்டாரி, பாஜகவை கடுமையாக விமர்சித்ததாக இர்ஷாத் செயின்வாலா கூறியுள்ளார்.

பாஜகவின் தொண்டரான முகம்மது தாஹிர் என்ற நபர் மூலம் ரியாஸ் அட்டாரி பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்று இர்ஷாத் செயின்வாலா தெரிவித்துள்ளார். தற்போது முகம்மது தாஹிரை காணவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று இந்திய டுடே தெரிவித்துள்ளது.

;