நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலியை மத ரீதியாக இழிவுபடுத்திப் பேசிய பாஜக எம்.பி ரமேஷ் பிதுரியை ராஜஸ்தான் தேர்தலுக்கான பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சந்திரயான் -3 குறித்த விவாதத்தின் போது, பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலியை நோக்கி மத ரீதியாக இழிவுபடுத்தி பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ரமேஷ் பிதுரியின் பேச்சு இஸ்லாமிய வெறுப்பு பேச்சு என பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ரமேஷ் பிதுரியின் பேச்சுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்தார். அதேபோல், சபாநாயகர் ஓம் பிர்லாவும் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.அதோடு, ரமேஷ் பிதுரிக்கு விளக்கம் கேட்டு பாஜக நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ரமேஷ் பிதுரி மீது கடுமையான நடிவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், எம்.பி ரமேஷ் பிதுரியை ராஜஸ்தான் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளது. இதன்மூலம் ரமேஷ் பிதுரியின் பேச்சை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சபாநாயகர் ஓம் பிர்லா கண்டித்தது எல்லாம் கண் துடைப்பு நாடகம் என்பது தெரிகிறது.
வெறுப்பு பேச்சுக்கான வெகுமதியாக புதிய பொறுப்பை ரமேஷ் பிதுரிக்கு பாஜக கொடுத்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர்.