லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் அடுத் தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கியஎதிர்க்கட்சியான பகுஜன் சமாஜிலிருந்து தலைவர்கள் பலரும் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். அவர் கள் சமாஜ்வாதி கட்சிக்கும், பாஜக-வுக்கும் தாவத் துவங்கியுள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்ற மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்கட்சியில் தற்போது 7 எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரான ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்து விட்டநிலையில், கடந்த சில மாதங்களில்மட்டும் கட்சி விரோத நடவடிக்கைகளைக் காரணம் காட்டி 11 எம்எல்ஏக்களை மாயாவதி தனது கட்சியில் இருந்து நீக்கி விட்டார். இது கட்சியைப் பலவீனப்படுத்தி இருப்பதுடன், உட்கட்சிக்குள் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜில் தொடர்வது எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு சரியாக இருக்குமா? என்று அந்த கட்சித் தலைவர்கள் பலரையும் யோசிக்க வைத் துள்ளது. இதனால் பலரும் கட்சி தாவத் தயாராகி விட்டனர்.
அண்மையில், பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்கள் 9 பேர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இவர்கள் விரைவில் சமாஜ்வாதியில்இணைவார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல 12-ஆவது எம்எல்ஏவாக நீக்கப்பட்ட பகுஜன் சமாஜ் சட்டமன்றக்குழுத் தலைவர் லால்ஜி வெர்மாவும் சமாஜ்வாதியில் இணைகிறார். மேலும், இந்த 12 எம்எல்ஏ-க்களும் உ.பி. சட்டப்பேரவையில் தங்களை தனி அணியாக அங்கீகரிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
லால்ஜி வெர்மா பகுஜன் சமாஜின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர்என்ற நிலையில், அவர் சமாஜ்வாதிக்குச் செல்ல, மற்றொரு மூத்தத் தலைவரான ராம் அச்சல் ராஜ்பர் பாஜக-வுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார்.இது பகுஜன் சமாஜ் கட்சிக்கான பின்னடைவாக பார்க்கப்படுகிறது.