புதுதில்லி, ஜன. 12 - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் வியாழனன்று நேரில் சந்தித்தனர். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் அரசியலமைப்புச் சட்ட மீறலை விளக்கி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அவர்கள் வழங்கினர். ஆளுநர் ரவி, அரசியலமைப்புச் சட்ட விதிகளை தொடர்ந்து மீறி வருவதால், இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதியிடம் முறையிடுவது என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்தார். அதனடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு, ஆளுநரின் தன்னிச்சையான செயல்பாடுகளை விளக்கி கடிதம் ஒன்றை எழுதினார். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, என்.ஆர். இளங்கோ, டி.ஆர். பாலு, வில்சன் உள்ளிட்டோர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, அவரது மாளிகையில் வியாழனன்று காலை 11.30 மணிக்கு நேரில் சந்தித்தனர். அப்போது, தமிழ்நாடு முதல்வரின் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கினர். குடியரசுத் தலைவர் உடனான சந்திப்புக்குப் பிறகு திமுக எம்பி டி.ஆர். பாலு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் உரையின் போது சில வார்த்தைகளை தவிர்த்ததும் சில வார்த்தைகளை அவரே சேர்த்ததும் மரபுக்கு மீறிய செயல் என்று குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தோம். தேசிய கீதம் பாடும் முன்பே பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியது தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயல்; எனவே முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ள கடிதத்தை படித்துப் பார்த்துவிட்டு உங்கள் மனதிற்குப் பட்ட முடிவை எடுங்கள் என குடியரசுத் தலைவரிடம் கேட்டுக் கொண்டோம்” என்று டி.ஆர். பாலு தெரிவித்தார்.