மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் ஆகிய மூன்று இடதுசாரிக் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறவில்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் எஸ்.பி.ஐ தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இவ்விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதே சமயம் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திற்கு அளித்த விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் ஆகிய மூன்று இடதுசாரிக் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறவில்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 17-ஆம் தேதி வெளியிட்டுள்ள விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், தேர்தல் பத்திரம் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்தே அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்து வந்தது தேர்தல் ஆணையத்திற்கு தெரியும்; தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த நன்கொடையும் பெறக்கூடாது என்று முடிவு செய்து, இந்தக் கொள்கை நிலைப்பாட்டிற்கு இணங்க, தேர்தல் பத்திரங்கள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த நன்கொடையும் பெறவில்லை.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மூன்று வழக்குகளில் ஒன்று சிபிஐ(எம்) வழக்கு என்பதும் நீங்கள் அறிந்திருக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கையெழுத்திட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.