அகர்தலா:
மத்தியில் பாஜகவுக்கு எதிரான உண்மையான மாற்றை கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே தர முடியும் என்று சிபிஎம் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார். திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடந்தஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க விழாவில் அவர் மேலும் பேசியதாவது: இந்திய விடுதலைப் போராட்டக்காலத்தில் எழுந்த கருத்தியல் ரீதியான அடித்தளத்தை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது. மோடி- ஷா ஆட்சிக்கு எதிரான மாற்றை உருவாக்குகிற பொறுப்பைநிறைவேற்றிட கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே சாத்தியமாகும். விவசாயிகளையும் தொழிலாளர்களையும் மாணவர்களையும் இளைஞர்களையும் பாஜகவுக்கு எதிராக அணிதிரட்டுவதற்கான தீவிர பணியை சிபிஎம் மேற்கொண்டுள்ளது. காலனியத்துக்கு எதிரான வலுவான போராட்டம் நடத்திய பாரம்பரியம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.பெரும் வேட்டையாடுதல்களை எதிர்கொண்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். தலைவர்களை பொய் வழக்குகளில் சிக்கவைத்து வேட்டையாடினார்கள். ஆனாலும்அவற்றால் அன்றும் இன்றும் கம்யூனிஸ்ட்டுகளின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை என்பதை பிரகாஷ் காரத் சுட்டிக்காட்டினார்.திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் பேசுகையில், திரிபுராவில் பாஜக அரசு, தீவிரவாத சக்திகள் தங்களது கரங்களை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது. சிபிஎம்தலைவர்களை பரவலாக வேட்டையாடுகிறது. திரிபுராவில் நடந்துவரும் மக்கள் விரோத அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவோம் என கூறினார்.