இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், இந்திய தபால் துறையுடன் இணைந்து 1.5 லட்சம் தபால் நிலையங்களை நவீனமயமாக்கி வருகிறது.
கடந்த 2013-ஆம் ஆண்டில், இந்திய தபால் துறை ஐடி நிறுவனமான டிசிஎஸ் உடன் ரூ.1,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி டிசிஎஸ் நிறுவனம், தபால் நிலையங்களுக்குத் தேவையான முழுமையான கணினி மயமாக்கப்பட்ட ஒருங்கிணைந்த சேவையை உருவாக்கியுள்ளது. தபால் நிலையங்களில் பணிபுரியும் 5 லட்சம் ஊழியர்கள், ஒரு நாளில் நடக்கும் லட்சக்கணக்கான பரிவர்த்தனைகள், வாடிக்கையாளர்கள் என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தை டிசிஎஸ் வழங்கியுள்ளது.
இஆர்பி முறையிலான இந்த ஒருங்கிணைந்த சேவை மூலம் தகவல் அனுப்பும் நடவடிக்கைகள் முதல், நிதி, வரவு செலவு கணக்கு, மனிதவளத் துறை செயல்பாடுகள் என அனைத்தையும் மேம்பட்ட முறையில் நிர்வகிக்க முடியும். இதன் மூலம், வங்கிகள் மற்றும் பிற துறைகளைப் போலவே தபால் நிலையங்களிலும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை சிறப்பான முறையில் வழங்குவதோடு விரைவாகவும் வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.