india

img

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மகாராஷ்டிராவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் நேற்று (புதன்கிழமை) நிறைவேற்றப்பட்டது. இதற்கு அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிரா மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஐஜிபி ரேங்க்குக்கு இணையான பதவியில் இருந்த அப்துர் ரஹ்மான், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர், "குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை சாராம்சத்திற்கு எதிராக இருக்கிறது. நான் இந்த மசோதாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். என் ஒத்துழையாமையைக் காட்டும் வகையில் நான் நாளையில் இருந்து அலுவலகத்துக்குச் செல்வதில்லை என முடிவு செய்துள்ளேன். இறுதியாக எனது பணியை நான் ராஜினாமா செய்கிறேன்" எனப் பதிவிட்டு, அதனுடன் தனது ராஜினாமா கடிதத்தையும் இணைத்துள்ளார்.