பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி எம்.பி-க்கள் திட்டமிட்டுள்ளனர்.
பாஜக-வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில், பெங்களூரு மத்திய தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக, அது தொடர்பான ஆதாரங்களையும் கடந்த சில நாள்களுக்கு முன் அவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனிடையே, பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை (SIR) தேர்தல் ஆணையம் முன்னெடுத்தது. அதன்படி, பல்வேறு காரணங்களுக்காக 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி எம்.பி-க்கள் திட்டமிட்டுள்ளனர்.