எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் குழு வரும் 29, 30-ஆம் தேதிகளில் மணிப்பூர் செல்கிறது.
மணிப்பூரில் கடந்த 80 நாட்களுக்கு மேலாக வன்முறைகள் நிகழ்ந்து வருகிறது. பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்முறை, வீடுகள், வாகனங்கள் மற்றும் தேவாலயங்கள் எரிப்பு போன்ற வன்முறை சம்பவங்களை அரங்கேறியுள்ளன. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் வன்முறையை கட்டுப்படுத்தாமல் ஒன்றிய மற்றும் அம்மாநில பாஜக அரசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், மோடியை இது தொடர்பாக பேச வைக்க மக்களவையில் நேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. மணிப்பூர் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி-க்கள் கருப்பு நிற உடை அணிந்து வந்தனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் குழு வரும் 29, 30-ஆம் தேதிகளில் மணிப்பூர் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மாநிலத்தின் தற்போதைய நிலவரம் குறித்தும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.