இந்தியாவில் பாதுகாப்பற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
2018-19 ஆம் ஆண்டின் உணவு பொருட்களின் தரம் குறித்து உணவு தர கட்டுப்பாட்டு அமைப்பு (FSSAI) ஆய்வு ஒன்றை நடத்தியது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 6 ஆயிரத்து 459 உணவுப் பொருட்களை கொண்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அறிக்கையை தற்போது உணவு தர கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்யும் மாநிலங்களின் பட்டியலில் 12.7 சதவீதம் பெற்று தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதனையடுத்து அஸ்ஸாம் மாநிலம் 8.9 சதவீதமும், ஜார்க்கண்ட் 8.8 சதவீதமும், மேற்கு வங்கம், ஒடிசா 7.6 சதவீதம் என்ற முறையே பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அதேபோல், தரமற்ற உணவு கிடைப்பதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மேலும், உணவு பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதி தொடர்பாக ஒட்டப்படும் லேபிள் விவகாரத்திலும் தமிழகம் மோசமாக இருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.