பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் செல்போன்கள் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்கப்பட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக விவகாரத்தில் சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் என்.ராம் உள்ளிட்டோர் பொது நல மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் 2 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியர்கள் யாரையும் நாங்கள் உளவு பார்க்கவில்லை. இது தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மறுக்கிறோம். ஆதாரமற்ற விதத்தில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.