india

img

மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கவில்லை... தடுப்பூசி வாங்கும் முனைப்பில் கேரளம்... முதல்வர்.....

திருவனந்தபுரம்:
கோவிட் தடுப்பூசி குறித்து மத்திய அரசின் முடிவுக்கு காத்திருக்க விரும்பவில்லை என்றும்  தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசி வெளியில் இருந்து வாங்க வேண்டும். அதற்கான கலந்துரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

வியாழனன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மேலும் கூறியதாவது: தடுப்பூசி கிடைக்கச் செய்யுமாறு மத்திய அரசை கேரளம்  கேட்டுள்ளது. இதில் விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று கேரளம் எதிர்பார்க்கிறது. ஆனால் அதை மத்திய அரசிடமிருந்து பெற காத்திருக்க விரும்பவில்லை. மத்திய அரசின் ஆரம்ப தடுப்பூசி கொள்கையின் அடிப்படையில் மட்டுமே நாம் தடுப்பூசிகளை வாங்க முடியும். அதற்கான செயல்முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தலைமை செயலாளர், நிதி செயலாளர், சுகாதார செயலாளர் ஆகியோர் கொண்ட குழு இதற்கான நடவடிக்கை எடுக்கும் எனவும் முதல்வர் கூறினார்.

தடுப்பூசி ஏற்பாடுகள்

தடுப்பூசி மையங்கள் சிலவற்றில் கூட்டம் காணப்படுகிறது. தடுப்பூசிக்கான ஆன்லைன் பதிவு முறை குறித்து எந்த குழப்பமும் இல்லை. ஆன்லைனில் முன்பே பதிவுசெய்தவர்கள் மட்டுமே தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி பெற முடியும். தற்போது, நேரடியாக பதிவு செய்தவர்களுக்கும் தடுப்பூசி போடுவது வழக்கம். இரண்டாவது டோஸ் எடுப்பவர்களுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயமாகும். தடுப்பூசி கிடைப்பதன் அடிப்படையில் தடுப்பூசி போட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு மே மாதம் முதல் தேதியிலிருந்து தடுப்பூசி போடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த கட்டத்தில் 1.65 கோடி பேர் மாநிலத்தில் உள்ளனர். எனவே, தடுப்பூசி வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டியிருக்கும். தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்க துல்லியமான அளவுகோல்கள் உருவாக்கப்படும். தடுப்பூசி இரண்டு அல்லது மூன்று நிலைகளில் வழங்கப்பட உள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதை ஆய்வு செய்து உடனடியாக அளவுகோல்களை வகுக்கும் பணிக்கு நிபுணர் குழு பொறுப்பாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

                              ***************

நிவாரண நிதிக்கு ஒரே நாளில் ரூ. 22 லட்சம்

செய்தியாளர்கள் கூட்டத்தில் எழுந்த கேள்விக்கு பதிலளித்து அவர் மேலும் கூறியதாவது: 

இதுதான் கேரளத்தின் ஒரு சிறப்பு. கேரள சமூகத்தின் ஒற்றுமையையும்  பலத்தையும் நாம் ஏற்கனவே கண்டவர்கள். இந்த கட்டத்தில், பலர் இயல்பாகவே இதுபோன்ற செயலுக்கு (தடுப்பூசி சவால்) தயாராக முன்வருகிறார்கள். அத்தகைய நபர்களின் ஈடுபாடும் ஆதரவும் தான் அனைத்து நெருக்கடிகளையும் சமாளிப்பதில் நம்மை பலப்படுத்துகிறது. தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுவது உறுதி. மக்கள் இயல்பாகவே நெருக்கடி காலங்களில் அரசாங்கத்துடன் நிற்க விரும்புவார்கள். இதிலும் அவர்கள் அவ்வாறே செய்கிறார்கள் ‘என்றார் முதலமைச்சர்.

மத்திய அரசு கோவிட் தடுப்பூசியின் விலையை மாநிலங்களுக்கு பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப சமூக ஊடகங்களில் பிரச்சாரம் தொடங்கியது. தடுப்பூசி தொடர்பான மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து இந்த பிரச்சாரம் உள்ளது. கோவிட் தடுப்பூசியை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், கேரளத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் புதனன்று தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில்தான் #VaccineChallenge (தடுப்பூசி சவால்) என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் செயல் படத் தொடங்கியது. தடுப்பூசி போடப்பட்டவர்களும் தடுப்பூசி போடாத பலரும் தங்கள் பங்களிப்புகளை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் செலுத்தி ரசீதுகளை பதிவிடுவதன் வாயிலாக இந்த  போராட்டத்தில் இணைந்துள்ளனர். வியாழனன்று (ஏப்.22) மதியம் 1 மணி வரை, முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.9.48 லட்சம் வந்திருந்தது. அடுத்த 3 மணி நேரத்தில் அது ரூ.22 லட்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.