india

img

1,99,256 படுக்கைகள்... தேவையான ஆக்சிஜன் கையிருப்பு... கோவிட்டிலிருந்து பாதுகாப்பு தயார் நிலையில் கேரளம்.... முதல்வர்.....

திருவனந்தபுரம்:
கோவிட்டின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள கேரள அரசு தயாராக உள்ளது. கையிருப்பாக 1,99,256 படுக்கைகள் மற்றும் தேவையான ஆக்சிஜன் உள்ளதாக முதல்வர் பினராயிவிஜயன் கூறினார். கோவிட்டிலிருந்து பாதுகாப்பை வலுப்படுத்த அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் வெள்ளியன்று விவாதம் நடத்த உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது:ஒப்பீட்டளவில் மலப்புரம், கண்ணூர், கோழிக்கோடு, கோட்டயம், திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் காசர்கோடு மாவட்டங்கள் குறைந்த அளவில் நோய் பரவலைக் கொண்டுள்ளன. அங்கெல்லாம் கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. முதுமை மற்றும் கோவிட்டால் ஆபத்துக்கு உள்ளாகும் நோய்கள்அதிகம் உள்ள மாநிலமாக கேரளம் இருந்தபோதிலும், மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை பராமரிக்க முடிந்தது. இரண்டாவது அலையில், அரசு வலுவான சுகாதார அமைப்புகளை ஏற்படுத்தியது. நோய் பரவுவதை சமாளிக்க மருத்துவத்திறன் (சர்ஜ் கெப்பாசிட்டி) அதிகரிக்கப்பட்டுள்ளது.

போதுமான ஆக்சிஜன் வழங்கல்
தற்போது, மாநிலத்திற்கு 74.25 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. கேரளா 219.22 மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 9735 ஐசியூபடுக்கைகள் உள்ளன. இவற்றில் 931 பேர் மட்டுமேகோவிட் நோயாளிகள். அரசு மருத்துவமனைகளில் மட்டுமே 2,650 ஐசியூ படுக்கைகள் உள்ளன. அவற்றில் கோவிட் - கோவிட் அல்லாத நோயாளிகள் உட்பட 50 சதவிகிதம் அளவுக்கே உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3776 வென்டிலேட்டர்கள் உள்ளன. இவற்றில்277 நோயாளிகள் உள்ளனர். அரசு மருத்துவ மனைகளில் உள்ள 2253 வென்டிலேட்டர்களில், 18.2 சதவிகிதம் மட்டுமே நோயாளிகள் உள்ளனர்.

1,99,256 படுக்கைகள்
கோவிட் முதலுதவி மையங்கள், இரண்டாம் வரிசை சிகிச்சை மையங்கள் மற்றும் மாவட்ட கோவிட் மையங்கள் ஆகியவை இணைந்து 2249 மையங்களில் 1,99,256 படுக்கைகள் உள்ளன.136 தனியார் மருத்துவமனைகளில் 5713 படுக்கைகள் உள்ளன.கோவிட் பாதிப்புகளைக் குறைக்க முந்தையஅலையில் ‘டிலே தி பீக்’ கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது, இந்த முறை ‘க்ரஷ் தி கர்வ்’ கொள்கையை கேரளம் ஏற்றுக் கொண்டது. அடிப்படைகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள், முகக்கவசம் அணியுங்கள், தனிமனித இடைவெளியை பராமரியுங்கள், அடிக்கடி கைகளைக் கழுவுங்கள், ஒருவருக்கொருவர் பாதுகாப்பு வலையை உருவாக்குங்கள். நெருக்கமான தொடர்புகளை தவிர்த்திடுங்கள், முடிந்தவரை பெரும்பாலானோருக்கு தடுப்பூசி  போட்டும் நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றும் முதல்வர் கூறினார்.

மூன்றரை லட்சம் டோஸ்
இந்தியாவில், தடுப்பூசி வீணாகாமல் கேரளத்தில் பரவலாக விநியோகிக்கப்படுகிறது. தினமும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. தடுப்பூசியின் 62,25,976அளவுகள் (டோஸ்) இதுவரை வழங்கப்பட்டுள் ளன. தடுப்பூசிகளின் பற்றாக்குறை தற்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது. பயனுள்ள நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் கூறினார்.