சண்டிகர்:
ஜன.26 குடியரசு தினத்தன்று நடைபெறவுள்ள டிராக்டர் பேரணியில் பங்கேற்க பஞ்சாப் மாநில கிராமங்கள் அனைத்தும் ஆர்வத்துடன் செயல்படுகின்றன.
இதுகுறித்து பாரதிய விவசாயிகள் சங்கத்தின் (பாரத் கிசான் யூனியன்) லஹோவல் பொதுச் செயலாளர் ஹரிந்தர் சிங் கூறுகையில், “எங்கள் சங்கத் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்திக்கிறோம். அவர்களிடம், குடும்பத்திலிருந்து குறைந்தது ஒருநபராவது ஜன.26 அன்று நடக்க உள்ள டிராக்டர் பேரணியில் பங்கேற்க வேண்டும் எனவும், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது 5 டிராக்டர்கள் இந்த பேரணியில்இணைந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறினார். இந்த மாபெரும் டிராக்டர் பேரணியில் பங்கேற்க இளைஞர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். விவசாய சங்கங்களில் தன்னார்வலர்களையும் இணைத்துக் கொள்கிறோம். குறிப்பாக சாங்ரூர் மாவட்ட கிராமத்திலிருந்து, குடும்பத்திற்கு ஒருவராவது பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளோம். பஞ்சாப் முழுவதும் பல இடங்களில் டிராக்டர் பேரணிக்கான பணிகள்மேற்கொள்ளப்படுகின்றன. பேரணிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை ஒன்று சேர்க்க கிராம பஞ்சாயத்துக்களுடன் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என பாரதிய விவசாயிகள் சங்க (பிகேயு) ராஜேவால் பொதுச் செயலாளர்ஓம்கார் சிங் தெரிவித்துள்ளார்.