டேராடூன்:
ஜீன்ஸ் பேண்ட் அணியும் பெண்களால்தான் சமூகம் சீர்கெட்டுப் போவதாக உத்தரகண்ட் மாநில பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத் கண்டுபிடித்துள்ளார். தலைநகர் டேராடூனில், உத்தரகண்ட் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்புஆணையம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில்தான் இவ்வாறு அவர் பேசியுள் ளார்.
அவர் மேலும் பேசியிருப்பதாவது:
தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவந்த ஒரு பெண், கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்தவகையான பெண், சமூகத்தில் மக்களைச் சந்தித்துஅவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கப் போவதாக சொல்கிறார். அவ்வாறு வெளியே செல்லும் அவரைஇந்த சமூகம் எப்படி பார்க்கும்? நமது குழந்தைகளுக்கு அவர் எந்தக் கலாச்சாரத்தை கற்றுத் தருகிறார்? கிழிந்த ஜீன்ஸ் அணிவது, சமூக முறிவுக்கும், போதைப்பொருள் பயன்பாட்டுக்கும் காரணம் என்பதை அவர் அறிவாரா?
பெண்கள் முழுமையாக முழங்கால்களைக் காட்டுகிறார்கள். இது நல்லதா? இதுபோன்ற பழக்கவழக்கங்கள் எங்கிருந்து வருகின்றன? இவை அனைத்தும், மேற் கத்தியமயமாக்கலின் மீதான பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும். யோகாசெய்வது… உடலை சரியாகமூடுவது போன்ற கலாச்சாரத்தை உலகம் இன்று நம்மைப் பார்த்து கற்று வருகிறது. இந்நிலையில், ஜீன்சைகத்திரிக்கோலால் வெட்டிக்கொண்டு, வெறும் முழங்கால் களைக் காண்பிப்பதும், கிழிந்த டெனிம் அணிந்து பணக்கார குழந்தைகளைப் போலதோற்றமளிப்பதும் சமூக சீர்கேட்டுக்குத்தான் வழிவகுக்கும்- என்று தீரத் சிங் ராவத் பேசியுள்ளார்.
*************
குழந்தை வளர்ப்பு வேலையை மட்டும் பெண்கள் பாருங்கள்!
பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத்தைத் தொடர்ந்து, அமைச்சர் கணேஷ் ஜோஷி என்பவரும் பெண்களுக்கு உபதேசங்களை அள்ளி வீசியுள்ளார். “பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதை எதையோ சாதிக்க விரும்புவதாக சொல்கிறார்கள். பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தங்களின் குடும்பத்தினரையும் குழந்தைகளையும் கவனிப்பது மட்டும்தான்” என்று தெரிவித்துள்ளார்.