புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 70 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மோடி அரசு அச்சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று பிடிவாதத்துடன் செயல்படுகிறது. இதனை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.
இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநில அரசு காணொலி காட்சி வழியாக நடத்திய நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசுகையில், “விவசாயிகளுடைய உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும், நாட்டின் எந்தவொரு இடத்திலும் விற்பனை செய்ய உதவவும்தான் வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டன. வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், தேவைப்பட்டால் அவற்றை திருத்தவும் வெளிப்படையாக பேசவும் அரசு தயாராக உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, பொதுவான விவசாயிகளிடத்தில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையினால்தான், கொரோனாவுக்கு மத்தியிலும் விவசாயிகள் சாதனை அளவில் உற்பத்தி செய்துஉள்ளனர் என்று கூறிக்கொண்டார்.