india

img

குடியரசு தினத்தில் வெற்றிகரமாக அணிவகுப்பை நடத்திய விவசாயிகளுக்கு சிஐடியு வாழ்த்து....

புதுதில்லி:
குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் மிகவும் வெற்றிகரமான முறையில் அணிவகுப்பை நடத்திய விவசாயிகளுக்கு சிஐடியு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் அணிவகுப்பு, மக்கள் அணிவகுப்பாக மாறியிருந்தது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் மட்டும் அல்லாமல் நாட்டிலுள்ள அனைத்துப்பகுதி மக்களும் இதில் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர். அணிவகுப்பில் வந்தவர்களை வழியில் நின்று பல்லாயிரக்கணக் கான மக்கள் வாழ்த்தியுள்ளார்கள். இது 
அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்றுள் ளது. இது, விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு மக்களின் அபரிமிதமான ஆதரவு இருப்பதையும், பாஜக அரசின் நாசகர கொடூரமான கொள்கைகளுக்கு வலுமையான எதிர்ப்பு இருப்பதையும்  வெளிப்படுத்தியிருக்கிறது.

நடைபெற்றுவரும் போராட்டத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆளும் கட்சியின் ஏவலாட்கள் சில சீர்குலைவு செயல்களில் ஈடுபட்ட முயற்சிகளுக்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.  இந்த நபர்கள், விவசாய சங்கங்கள், அரசுடன் செய்துகொண்ட ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தை மீறி, அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவிவசாயிகளின் பிரதான பிரச்சனைகளி லிருந்து நாட்டின் கவனத்தைத் திசைதிருப்பும் இழிசூழ்ச்சியே தவிர வேறல்ல. அனைத்துவிவசாய சங்கங்களின் கூட்டமைப்பு (சம்யுக்த கிசான் மோர்ச்சா), இத்தகு சீர்குலைவு சக்திகளின் இழிநடவடிக்கைகளைத் தெள்ளத்தெளிவாகக் கண்டித்திருக்கிறது.

அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பால் ஒப்புக்கொள்ளப்பட்ட பாதைகளின் வழியே மிகவும் கட்டுப்பாட்டுடனும், அமைதியாகவும் டிராக்டர்கள்-விவசாயிகள் அணிவகுப்பு பெரும் எண்ணிக்கையில் நடைபெற்றிருப்பதை சிஐடியு பாராட்டுகிறது, வாழ்த்துகிறது. அமைதியான முறையில் அணிவகுத்துவந்த விவசாயிகள் மீதுகாவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டு களை வீசியதையும், குளிர்ந்த நீரை வாட்டர்கேனன்களின் மூலம் பீய்ச்சி அடித்ததையும் சிஐடியு கண்டிக்கிறது.மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற விவசாயிகள் பேரணியை –ஒன்றுபட்ட இயக்கத்தை -  ஆளும் வர்க்கங்களின் ஏவலாட்கள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் திசைதிருப்பிடலாம் என்கிற எண்ணம் ஈடேறாது என்று சிஐடியு முழுமையாக நம்புகிறது.விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளான வேளாண் சட்டங்கள் ரத்து மற்றும்மின்சார திருத்தச் சட்டமுன்வடிவு விலக்கிக் கொள்ளப்படுதல் ஆகியவற்றை அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  (ந.நி.)