புதுதில்லி:
அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 பேர் நியமிக்கப்பட்ட நிலையில், ஆர்எஸ்எஸ் - பாஜகவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்ற காரணத்திற்காக, 2 பேரை, ஜனாதிபதி ஜோ பைடன் விலக்கி வைத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் 46-ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். அவருடன் இந்தியதாய்க்கும் - ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த கறுப்பினத் தந்தைக்கும் பிறந்தவரான கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே பெண் ஒருவர்- அதுவும் இந்திய - ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியாவது இதுவே முதல்முறையாகும். இதனிடையே, ஜனாதிபதி ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் பணிபுரிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி,நீரா டாண்டன், உஸ்ரா ஜியா மற்றும் சமிரா பாசிலிஉள்ளிட்ட சுமார் 20 பேரை அண்மையில் பரிந் துரை செய்திருந்தார்.
அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ள இந்தியர்களுக்கு இது மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்பட்டது.இந்நிலையில், ஜனாதிபதி ஜோ பைடன், தேர்தலில் தனக்காக தீவிர பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகிய 2 பேருக்கு மட்டும் பணி ஒதுக்கீடு செய்யாமல் விலக்கி வைத்திருப்பது விவாதமாகி உள்ளது.மேலும் பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் இவர்களுக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பு காரணமாகவே இவர்களை ஜோ பைடன் நிர்வாகம் விலக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவிலுள்ள சுமார் 19 இந்திய அமைப்புகள் ஒன்றிணைந்து, ஜோ பிடனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர். அதில், “இந்தியாவில் தீவிர வலதுசாரி இந்துஅமைப்புகளுடன் உறவு கொண்ட பலர் ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளனர். பைடன் நிர்வாகத்தில் இதுபோன்ற நபர்களுக்கு இடம் அளிக்கக் கூடாது” என்று கூறியிருந்தனர். அத்துடன், அந்த கடிதத்திலேயே, சோனல் ஷாமற்றும் அமித் ஜானி ஆகியோரது பெயர்களைப் குறிப்பிட்டு, “இவர்கள், தீவிர வலதுசாரி நிலைப் பாடு கொண்டவர்கள்; இருவரும் இந்து மதவாத குழுக்களிடமிருந்து நிதியுதவி பெற்றவர்கள்; இந்து மேலாதிக்கத்திற்கு ஆதரவாகப் பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டவர்கள்” என்று சுட்டிக்காட்டி இருந்தனர்.
இவர்கள் இருவரும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் வெளிநாட்டு முகவர்கள் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டு இருந்தது. மேலும், “டிரம்பிற்கு எதிரானவர்களைப் போல காட்டிக்கொண்டு, சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ள ஜனநாயகக் கட்சியில் முக்கியஇடங்களைப் பிடித்துவிட்டனர். ஆனால் இந்தியாவில், இவர்கள் டிரம்பின் வெள்ளை இனவாத சிந்தனையாளர்களுக்குச் சமமானவர்கள், இந்துமேலாதிக்கவாதிகள். அமெரிக்காவில் இந்து சிறுபான்மையினராக தங்களைக் காட்டிக்கொள்ளும் இவர்கள், இந்தியாவில் மேலாதிக்கவாதிகளாக உள்ளனர்.
அமெரிக்காவில் அவர்கள் இனவெறியை எதிர்த்துப் போராடுவதைப் போலவும் பன்முககலாச்சாரத்தை ஆதரிப்பது போலவும் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில் தங்களது சொந்த இனவெறியை நிலைநிறுத்துகின்றனர்.எனவே, ஜோ பைடன் நிர்வாகத்தில் பணிபுரியும்அனைவரையும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்து மேலாதிக்கம் உட்பட எந்த மேலாதிக்கத்தை ஆதரிக்கும் நபரும் உங்கள் நிர்வாகத்தில் இருக்கக் கூடாது” என்று நீண்ட புகார் பட்டியலே வாசிக்கப்பட்டு இருந்தது.
இந்தப் பின்னணியில்தான், சோனல் ஷாமற்றும் அமித் ஜானி ஆகியோர் அமெரிக்க அரசுநிர்வாகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சோனல் ஷா, ஏற்கெனவே ஜோ பிடனின் ஒற்றுமைக் குழுவில் பணியாற்றியவர். அவரது தந்தை ஆர்எஸ்எஸ் நடத்தும் ‘ஏகல் வித்யாலயா’வை தோற்றுவித்தவர். மேலும், பாஜக வெளிநாட்டு நண்பர்கள் குழுவின் அமெரிக்கப் பிரிவு தலைவராகவும் இருந்தவர். விஸ்வ ஹிந்து பரிஷத் அமெரிக்கா சார்பிலும் செயல்பட்டு வந்தவர்.அமித் ஜானி இஸ்லாமியர்களை ஒன்றிணைக்கும் ஜோ பிடனின் ‘முஸ்லீம் அவுட்ரீச்’ பிரச்சாரத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல பாஜக தலைவர்களுடன் இவர் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவர். இவர்கள் இருவரும் ஒபாமா நிர்வாகத்திலும் பணியாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.