புதுதில்லி:
வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் குடியரசு தினத்தன்று தில்லியில் பேரணி நடத்துவோம் என்று விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
விவசாயிகளுக்கு விரோதமாக மத்தியபாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகர் தில்லி மாநில எல்லையில் பல்வேறு மாநிலவிவசாயிகள் முற்றுகையிட்டு 30 நாட்களுக்கும் மேலாக கடுங்குளிரையும் தாங்கிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு நடத்திய 6-வது கட்டபேச்சுவார்த்தையில்தான் விவசாயிகளின்2 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள் ளது.ஆனால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகளுக்கு இன்னும்தீர்வு எட்டப்படவில்லை. இது தொடர்பாக ஜனவரி 4 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைநடைபெறுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வேளாண்சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தடையை மீறி குடியரசு தினத்தன்று தில்லியில் நுழைவோம் என்றும், ஜனவரி 6 ஆம் தேதி முதல் 20 ஆம்தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் பேரணி,ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக கிராந்திகரி கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்ஷன்பால் கூறுகையில், பல்வேறு மாநிலங்களிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் ஜனவரி 23 அன்று நடத்தப்படும். குடியரசு தினமான ஜனவரி 26 அன்றுதலைநகரான தில்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று தெரிவித்தார்.