புதுதில்லி:
‘சமூக இடைவெளியை பின் பற்றாமல் அதிகளவில் நடத்தப் பட்ட மத நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள்தான் இந்தியாவில் கொரோனா 2-ஆவது அலைக்குமுக்கிய காரணம்’ என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல், உருமாறிய கொரோனா உள்ளிட்டவை குறித்த அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்புவெளியிட்டுள்ளது.
அதில், இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கவும் வேகமாகப் பரவவும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் அதிகளவில் நடத்தப்பட்ட மதநிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்வுகளும்தான் கொரோனா பரவல் அதிகரிக்க முக்கியக் காரணம். பொது சுகாதாரத்தைச் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டதும் மற் றொரு காரணமாகும். உருமாறிய கொரோனா வகைகளைக் கண்டறிய மேற்கொள்ளப் பட்ட மரபணு வரிசைப்படுத்தலில், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைப் போலவே உருமாறிய கொரோனா வகைகள் கண்டறியப்படுவதும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இந்தியாவில் B.1.617 கொரோனா வகை 21 சதவிகிதமும், B.1.1.7 கொரோனா வகை 7 சதவிகிதமும் கண்டறியப்படுகிறது. இந்த இரண்டு கொரோனா வகைகளும் மற்ற கொரோனா வகைகளைவிட வேகமாகப் பரவுகின்றன. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பதிவு செய்யப்படும் 95 சதவிகித கொரோனா உயிரிழப்புகளில் 93 சதவிகிதம் இந்தியாவில் தான் பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவுக்கு வெளியே பார்த்தால் பிரிட்டன் நாட்டில் B.1.617 வகை கொரோனா மற்றும் B.1.617.2 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.