புதுதில்லி:
பெட்ரோல் ,டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப்பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. இந்த விலையுயர்வால் பாதிக்கப்படும் மக்களை காக்கவும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது? என்று மக்களவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கட்சியின் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பட்ஜெட் விவாதத்தில் கே.நவாஸ்கனி எம்.பி.,பேசியதாவது:
நாட்டு மக்கள் இந்த பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அதற்கெல்லாம் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளதை எண்ணி வருந்துகின்றேன்.இதுவரை இருந்த பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பனை செய்வதை தவிர இந்த அரசுவேறு என்ன திட்டத்தை வைத்திருக் கின்றது? அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காக இந்த அரசு என்ன திட்டத்தை வைத்திருக்கிறது.அடித்தட்டு மக்கள் தினமும் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் பெரும் விலை உயர்வைக் கண்டிருக்கிறது. அதனால் மக்களின் அத்தியா வசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயத்தில் இருக்கிறது. இதற்குஇந்த அரசு என்ன தீர்வு வைத்திருக் கிறது. என்ன திட்டம் உங்களிடத்தில் உள்ளது. அடித்தட்டு மக்களுக்கு வெறும் ஏமாற்றம்தான் மிஞ்சுமோ என்ற அச்சம் எழுகிறது.
தற்போது தேர்தலை மனதில் வைத்து தமிழகத்திற்குப் பல்வேறு அறிவிப்புகளை மட்டும் செய்துள் ளது இந்த அரசு. பிரதமர் தமிழ கத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை படை பட்டாளத்துடன் வந்து மிக பிரம்மாண்ட மாக நாட்டி விட்டுச் சென்றார். எங்கே மதுரை எய்ம்ஸ்? இந்த அறிவிப்பு வெறும்அறிவிப்பாகவே இருக்கிறது. நாட்டப் பட்ட அடிக்கல் அடிக்கல்லாகவே இருக்கின்றது.
விவசாயிகளுக்காக சாலையில் ஆணிதான் அடித்தீர்கள்
இன்று லட்சக்கணக்கான விவசாயிகள் வீதிகளில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த அரசு அவர்களைப் பாதிக்க, கூர்மை யான ஆணிகளைச் சாலைகளில் அடிப்பதைத் தவிர வேறென்ன செய்திருக் கிறது? அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள இந்த அரசிற்கு நேரமில்லையா?கொரோனா காலத்தில் அரசு ரூ. 20 லட்சம் கோடி நிதி அறிவித்திருக்கிறது. அந்த நிதி எல்லாம் எங்கே? இதன்மூலம், எந்தெந்தத் துறைகள் அதில் பயனடைந்துள்ளன? இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பயிர்கள் விளைந்த நிலையில் மழையின் காரணமாக அறுவடை நேரத்தில் பயிர்கள் வீணாகிவிட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். எனவே, அந்த விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க அரசு முன்வர வேண்டும்.சமீபத்தில் 4 மீனவர்கள் இலங்கை கடற்படை படகுகள் மோதி உயிரிழந்த சம்பவமும் என்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றது. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை அரசு காண வேண்டும்.
பிரதமரின் நிவாரணம் வந்துசேரவில்லை
சிறுபான்மையினர் நலனுக்கு கடந்த ஆண்டு ரூ.5,029 கோடி ஒதுக்கிய அரசுஇந்த முறை வெறும் ரூ.4,810 கோடி எனக் குறைத்து ஒதுக்கியுள்ளது. இதில்குறிப்பாக சிறுபான்மையினரின் கல்விக்கான உதவித்தொகை சுமார் ஆறு சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதைஉயர்த்தித் தர வேண்டும் என அவைத்தலைவரின் மூலமாகக் கோருகிறேன். நிதி கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைவிட தற்போதைய பட்ஜெட்டில் 4.3 சதவீதம் குறைந்துள்ளது.இது சிறுபான்மையினர் மீது இந்த அரசின் அக்கறையின்மையைக் காட்டுகிறது. கடந்த நிதியாண்டில் ஒதுக்கப் பட்ட நிதியையும் முழுமையாகச் செலவிடாமல் இருப்பது பெரும் வேதனை அளிக்கிறது. ஏழை எளிய மக்கள் மருத்துவ உதவிக்காக பயன்பெற, பிஎம்என்ஆர்எப் (PMNRF) - எனப்படும் பிரதம மந்திரி தேசிய பேரிடர் நிவாரண நிதி உள்ளது. ஆனால் இதில் ஒதுக்கப்படும் நிதி மருத்துவமனைக்கு வந்து சேர்வதில்லை.இவ்வாறு நவாஸ்கனி எம்.பி.பேசி னார்.