india

img

சுயமரியாதையுள்ள விவசாயிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கிறார் பிரதமர் மோடி... தில்லி போராட்டத்தில் மாணவர் ஆவேசம்...

புதுதில்லி;
சுயமரியாதை உள்ள விவசாயிகளின் அமைதியான வாழ்க்கை முறையை சீரழிக்கும் பிரதமர் மோடி அபாயத்தின் அறிகுறி என்று 12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிலும் மாணவர் கரன் ப்ரீத் சிங் ஆவேசமாக கூறினார்.

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர் கரன் ப்ரீத் சிங் கூறுகையில், விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனது அப்பா சத்னம் சிங், அம்மா ஷரத் ஜித் கோர், இளைய சகோதரன் அமர்தீப்.  விஞ்ஞானி கல்பனா சாவ்லா பிறந்த ஊரான ஹரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் நாங்கள் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வருகிறோம். இதில் கிடைக்கும்லாபத்தைக் கொண்டு சிறிய அளவில் துணிக்கடை வைத்திருக்கிறோம். கொரோனா முடக்கத்திற்கு பின்னர் நாங்கள் தொழில் செய்ய முடியாமல் போனதால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துவிட்டது என்றார்.

போராட்டக்களத்தில் குடும்பம்
மேலும் கூறுகையில் , மோடி அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களின் விளைவாக எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் என அப்பா வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இந்த சட்டம் நம்மை என்ன செய்யும் என்று நான் அப்பாவை கேட்டேன். அதற்கு அவர் மோடி அரசு நம் கைகளை இறுக்க கட்டி ஏர் உழச் செய்யும் என்று கூறினார். இந்த எளிய விளக்கத்தை புரிந்துகொண்ட நான்  எனது தாய் மற்றும் சகோதரருடன் போராட்டக் களத்தில் இறங்கிவிட்டோம்.விவசாயிகளுக்கு ஆதரவாக யார் வந்தாலும் அவர்களுக்கு பணிவிடை செய்வது என்று முடிவு செய்தோம். இந்நிலையில் தில்லி குருத்வாரா நிர்வாக கமிட்டி  சார்பில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வருவோருக்கு நிம்மதியாக படுத்து உறங்குவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். படுக்கை, போர்வை, குடிநீர்,தேநீர் வழங்குவது, மின்விசிறி, ஏர்கூலர் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும் பணியை சிரமேற்கொண்டு செய்து வருகிறோம்.

போராளிகளுக்கு தொண்டு
சிங்கு எல்லை பகுதியில் நூற்றுக்கணக் கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு கூடாரங்களின் பொறுப்புகளை எங்கள் குடும்பம் மேற்கொண்டு வருகிறது. போராளிகளுக்கு செய்யும் பணி கடவுளுக்கு செய்யும் பணியாக கருதுகிறோம். கடந்த 257 நாட்களாக இந்த பணியை என் அப்பா மிகுந்த கவனத்துடன் செய்துவருகிறார். உபசரிப்பதில் தவறு ஏற்பட்டால்கோபப்படுவார். கூடாரத்தில் தங்கியுள்ள வர்களின் பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என அவ்வப்போது அறிவுரை கூறிக் கொண்டே இருப்பார். பொருட்கள் தொலைந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பார். விவசாயத்தில் கிடைத்த சேமிப்பைக் கொண்டு தற்போது நாங்கள் வாழ்ந்து வருகிறோம். மோடி அரசு இந்த கொடூரமான வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று ஆவேசமாக கூறுகிறார் மாணவர் கரன் ப்ரீத் சிங்.  நாங்கள் சுதந்திரமான விவசாயிகள்.  பெருமுதலாளிகளின் ஆளுகையின் கீழ் நாங்கள் வாழ மாட்டோம். எங்கள் போராட்டம்வெல்லும் வரை இந்தக் களத்தில் இருப்போம் என்று முஷ்டியை உயர்த்திக் கூறினார் மாணவர் கரன் ப்ரீத் சிங்.

தில்லியிலிருந்து... ம.மீ. ஜாபர்