india

img

உ.பி.யில் வென்டிலேட்டர் கிடைக்காமல் 10 நாட்களில் 6 பத்திரிகையாளர்கள் பலி......

லக்னோ:
கொரோனாவால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர் கிடைக்காமல் 10 நாட்களில் 6 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவின் ‘ஜதீத் அமல்’ உருது பத்திரிகையின் செய்தியாளரான சச்சிதானந்த் குப்தா தொற்றால் பாதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் கிடைக்காமல் ஏப்.14 ஆம் தேதி காலமானார். இதேபோன்ற லக்னோவின் மூத்தபத்திரிகையாளரான வினய் ஸ்ரீவாத்ஸவாவும் கொரோனா பாதிக்கப்பட்டு, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது ஊடகப் பிரிவினருக்கு உதவி கேட்டு டுவீட் செய்தும் உதவி கிடைக்காமல் காலமானார்.‘பயனியர்’ ஆங்கிலே நாளேட்டின் அரசியல் செய்திப் பிரிவின் பொறுப்பாளரான தவிஷி ஸ்ரீவாத்ஸவாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்பட்ட து. தவிஷியை மருத்துவமனையில் அனுமதிக்க தில்லியின் மூத்த பத்திரிகையாளர் தன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டி இருந்தது.இதன் பலனாக, லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் தவிஷி சேர்க்கப்படுவ தற்குள் அவர் பலியானார். 

மற்றொரு இளம் பத்திரிகையாளரான பவண் மிஸ்ராவிற்குத் தொற்று ஏற்பட்டுசிகிச்சையில் இருந்தார். எனினும், பவணுக்குத் தேவைப்பட்ட வென்டிலேட்டர் கிடைக்காமல் அவர் பலியானார். இதேபோல் கெரோனாவால் பாதிக்கப்பட்ட அங்கிட் சுக்லா (32) புதனன்று பலியானார். உ.பி. அரசு அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் குழுவின் நிர்வாகக் குழுவிற்கு புதிதாகத் தேர்வான பிரோமத் ஸ்ரீவாத்ஸவாவும் (42) கொரோனாவுக்கு பலியானார்.மேலும், சுமார் 15 பத்திரிகையாளர்கள் லக்னோவில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்திரிகையாளர்களின் உறவினர்கள் சுமார் 20 பேரும் கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பத்திரிகையாளர் சங்கத்தினர் மூலம்முதல்வர் யோகிக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், பத்திரிகையாளர்களை கொரோனா போராளிகளாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

மேற்கு வங்கத் தேர்தல் பணியில் 40 பேருக்குத் தொற்று
மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைக்கு எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் செய்திகளைச் சேகரிக்க அம்மாநிலப் பத்திரிகையாளர்களுடன் தில்லியில் இருந்தும் பலர் சிறப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், சுமார் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.