india

img

அமைச்சர்கள் அதிகரிக்கிறார்கள்; தடுப்பூசி அதிகரித்தபாடாக இல்லை.. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு ...

புதுதில்லி:
ஒன்றிய அரசில் அமைச்சர்கள் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது; மாறாக, தடுப்பூசி எண்ணிக்கை அதிகரித்தபாடாக இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

‘குறைந்தபட்ச அரசு; அதிகபட்ச நிர்வாகம்’ (Minimum government; Maximum governance) என்ற முழக்கத்தை முன்வைத்து, 2014-இல் 43 அமைச்சர்களுடன் பதவியேற்ற பிரதமர் மோடி, அண்மையில் புதிதாக 34 பேர்களை அமைச்சர்களாக சேர்த்துக் கொண்டார். இதன்மூலம் ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த அமைச்சர்கள் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்தது. மன்மோகன் சிங் ஆட்சியில் அதிகபட்சமாக 76 பேர் இருந்த நிலையில், அதனை பிரதமர் மோடி மிஞ்சினார்.

இந்நிலையில்தான், “அமைச்சர்கள் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது, தடுப்பூசி அதிகரித்தபாடாக இல்லை” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.#தடுப்பூசி எங்கே? (#Where are Vaccines) என்ற ஹேஷ்டாக்கையும் பதிவிட்டுள்ள அவர், மேலும் தடுப்பூசிகுறித்த வரைபடம் ஒன்றை பதிவிட்டு, “டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் 60 சதவிகிதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்கு நாள்தோறும் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த 7 நாட்களாக சராசரியாக நாள்தோறும் 34 லட்சம் தடுப்பூசிகள்தான் செலுத்தப்படுகின்றன. ஏறக்குறைய 54 லட்சம் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருக்கின்றன” என்று புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுள்ளார்.