india

img

பிப். 26 -இல் மோடி அரசுக்கு எதிராக ‘பாரத் பந்த்’.... நாடு முழுவதும் வணிகச் சந்தைகளை இழுத்து மூடும் வர்த்தகர்கள்...

புதுதில்லி:
அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விகிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வணிகச் சந்தைகளை மூடி போராட்டம் நடத்தப் போவதாக  அகிலஇந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (Confederation of All India Traders -CAIT) அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் 2017 ஜூலை 1 முதல் புதிய சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் நான்கு அடுக்குகளின் கீழ் ஒரே வரி விதிக்கப்பட்டது. ஆனால், வரி விகிதம் அதிகமாக இருப்பதாகவும், இதனைக் குறைக்க வேண்டும் என்றும் 3 ஆண்டுகளாகவே பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. வரிக் குறைப்பு மட்டுமல்லாமல் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவரவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், ஜிஎஸ்டி விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவதாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (CAIT) அறிவித்துள்ளது. இதை முன்னிட்டு அனைத்து வணிகச் சந்தைகளும் (Commercial markets) பிப்ரவரி 26 அன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டுஉள்ளது. நாட்டின் பல்வேறு பகுதி
களில் சுமார் 1,500 இடங்களில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றும் சிஏஐடி அமைப்பு கூறியுள்ளது.

ஜிஎஸ்டி வரி அடுக்குகளை மீண்டும் பரிசீலனை செய்து, வரி இணக்கத்தை எளிமையாக்கவும், வரி செலுத்துவோருக்கு ஏதுவாக ஜிஎஸ்டி-யை மாற்றவும் இந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.பிப்ரவரி 26 - நாடு தழுவிய போராட்டத்தில் அகில இந்திய  போக்குவரத்து நலக் கூட்டமைப்பும் (All India Transport Welfare Association - AITWA) கைகோர்த்துள்ளது. இதுதொடர்பாக பேட்டி அளித்துள்ள அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், “பிப்ரவரி 26 
அன்று நாடு முழுவதும் தர்ணா போராட்டங்கள் நடைபெறும். வணிகச் சந்தைகள் அனைத்தும் இழுத்து மூடப்படும். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்களும், வர்த்தகக் கூட்டமைப்புகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றன” என்று தெரிவித்துஉள்ளார்.