india

img

குடியரசுத் தினத்தன்று கலவரம் நடத்தியது பாஜக-தான்..... அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்க குற்றச்சாட்டு...

புதுதில்லி:
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக, அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில், நாடு முழுவதும் மகா பஞ்சாயத்து கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதில், உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் ஆத் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:“மத்திய அரசு விவசாயிகளின் நிலங்களை அபகரித்து 3-4 கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்க்க விரும்புகிறது. சொந்த நிலத்திலேயே விவசாயிகளை கொத்தடிமை ஆக்கப் பார்க்கிறது. 3 வேளாண் சட்டங்களும் கறுப்புச் சட்டங்கள். விவசாயிகளுக்கான மரண முன்னறிவிப்புகள். இதனால்தான் வாழ்வா; சாவா? என்ற நிலையில், 90 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் தில்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரை விட்டுள்ளனர். ஆனால், மத்திய அரசுக்கு கொஞ்சம்கூட இரக்கமில்லை. மாறாக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செய்யாதஅட்டூழியங்கள், அராஜகங்களை விவசாயிகள் மீது ஏவிக் கொண்டிருக்கிறது. 

வேளாண் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணி நடத்தியதற்காக, விவசாயிகள் மீதே தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. நமது விவசாயிகள் எப்படி தேசத் துரோகிகளாக இருக்க முடியும்? நம்முடைய விவசாயிகள் எதையும் செய்வார்கள். ஆனால், நாட்டிற்கு எதிராக ஒருபோதும் செயல்படமாட்டார்கள். தில்லி யூனியன் பிரதேசத்தின் முதல்வர் என்ற வகையில், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது, என்னநடந்தது என்பது எனக்கு தெரியும். சுதந்திரத் தினத்தன்று தில்லி விவசாயிகள் பேரணியில் திட்டமிட்டு கலவரத்தை அரங்கேற்றியவர்கள் பாஜக-வினர்தான். தில்லி சாலைகளை சரியாகத் தெரியாத விவசாயிகளை மத்திய பாஜக அரசுதான் அன்று தவறாக வழி நடத்தியது. செங்கோட்டையில் சீக்கியக் கொடியை ஏற்றியவர்களும் அவர்கள்தான்.”  இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.