india

img

இந்தியா பகுதியளவே சுதந்திர நாடாக உள்ளது..... மோடி ஆட்சியில் குடிமக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.... அமெரிக்காவைச் சேர்ந்த ‘ப்ரீடம் ஹவுஸ்’ அமைப்பு அறிக்கை...

புதுதில்லி:
சுதந்திரக் குறியீட்டில் (Freedom Index) முழு சுதந்திர நாடு என்ற தகுதியை இந்தியா இழந்து விட்டதாகவும், மோடி ஆட்சியில் குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, பகுதியளவே (‘Partly Free’ Country) சுதந்திரம் நிலவும் நாடாக இந்தியா தற்போது மாறியிருப்பதாகவும், ‘ப்ரீடம் ஹவுஸ்’ என்றஅமைப்பு தனது ஆய்வில் தெரிவித் துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல் படும் ‘ப்ரீடம் ஹவுஸ்’ (Freedom House) எனும் அரசு சாரா நிறுவனம், மக்கள் சுதந்திரமாக வாழும் நாடுகள் குறித்த ஆய்வை ஒவ்வொரு ஆண்டும், சுமார் 125 ஆய்வாளர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஆலோசகர்களின் உதவியுடன் மதிப்பிட்டு வருகிறது. அரசியல் உரிமைகள் மற்றும் குடிமக்களின் உரிமைகள் என்ற இரண்டு முக்கிய அளவுகோல்களை வைத்து, ஒவ்வொரு நாட்டிலும் அல்லது பிரதேசத்திலும் நிலவும் சுதந்திரத்தை ‘பிரீடம் கவுஸ்’ வகைப்படுத்துகிறது. 

அந்த வகையில், 2021-ஆம் ஆண்டிற்கான “உலக சுதந்திரம்” (Freedom in the World Report 2021) குறித்த ஆய்வறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.இதில், நியூசிலாந்துக்கு 100-க்கு 99 புள்ளிகளையும், கனடாவுக்கு 100-க்கு 98 புள்ளிகளையும், இங்கிலாந்துக்கு 93 புள்ளிகளையும், அமெரிக்காவுக்கு 83 புள்ளிகளையும் அளித்துள்ள ‘ப்ரீடம் ஹவுஸ்’, உலகின்முக்கிய ஜனநாயக நாடாக பார்க்கப் படும் இந்தியாவுக்கு 100-க்கு 67 புள்ளிகளையே வழங்கியுள்ளது. 

கடந்த ஆண்டு இந்தியா 71 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், அதைக்காட்டிலும் தற்போது 4 புள்ளிகளைக் குறைத்துள்ளது.‘நரேந்திர மோடி 2014-ல் ஆட்சிக்குவந்தது முதல் இந்தியாவில் அரசியல்உரிமைகளும், குடிமைச் சமூக சுதந்திரமும் மிகவும் புரையோடிப்போயுள் ளது’ என்று கடுமையான விமர்சனத்தை ‘ப்ரீடம் ஹவுஸ்’ வைத்துள்ளது.“இந்தியா உலக அளவில் மாபெரும் ஜனநாயக தலைமை நாடாக இருந்த நிலையில் மோடியின் ஆட்சியில் அனைவருக்கும் சம உரிமை என்பது மாறி, ‘இந்துக்கள் ஆதரவு’ என்னும் குறுகிய மனப்பான் மையில் நாடு செயல்பட தொடங்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடிஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவில் மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக பேசுவோர் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.இந்தியாவில் பல இந்து தேசியவாத அமைப்புகளும் சில ஊடகங்களும் முஸ்லிம்-விரோத கருத்துக் களை ஊக்குவிக்கின்றன. பசுக்களை படுகொலை செய்ததாக அல்லது தவறாக நடத்தியதாக கூறி, முஸ்லிம் களுக்கும், தலித்துகளுக்கும் எதிரான தாக்குதல்கள் நடக்கின்றன.இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்ற பல்வேறு நிறுவனங்களின் சுதந்திரமும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள் ளது” என்று குற்றம் சாட்டியுள்ளது.அரசியல் உரிமைகளுக்கான சுதந்திரம் பிரிவில் இந்தியாவிற்கு 40-க்கு 34 புள்ளிகளை ‘பிரீடம் ஹவுஸ்’வழங்கினாலும், மக்களின் உரிமைகளுக்கான சுதந்திரம் பிரிவில் 60-க்கு 27 புள்ளிகளையே வழங்கியுள்ளது. நாட்டின் அனைத்துப் பிரிவுகளுக்கும் முழு அரசியல் உரிமைகள் உறுதி செய்யப்படுவது தொடர்பான அரசியல் பன்மைத்துவம் குறித்த விஷயத்தில், இந்தியாவுக்கு நான்கிற்கு 2 புள்ளிகளையே ‘ப்ரீடம் ஹவுஸ்’ வழங்கியுள்ளது. 

“குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரில் முஸ்லிம்களுக்கான இந்திய குடியுரிமையை மறுப்பதும், அதேநேரத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிலருக்கு குடியுரிமையை அளிப்பதும், இந்தியாவின் பன்மைத்துவத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது” என்று அது குறிப் பிட்டுள்ளது.கருத்துச் சுதந்திரம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றிலும் மோசமான முறையில், 16-க்கு 9 புள்ளிகளே இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2014 முதலாகவே பத்திரிகையாளர்கள் மீது அரசாங்கத்தின் கூடுதல் அழுத்தம் காரணமாக பத்திரிகை சுதந்திரம் இந்தியாவில் சமரசம் செய்யப்படுவதாக அறிக்கை விமர்சித் துள்ளது.மேலும் கல்வி சுதந்திரத்தை சீர் குலைக்கும் நோக்கில் வளாகங்களில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் அரசாங்கத்திற்கு நெருக்கமான சக்திகள் இந்தியாவின் கல்வி வளாகங்களில் கல்வி சுதந்திரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் அல்லது செயல் பாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறும்பிரீடம் ஹவுஸ், நாட்டில் நீதித்துறையின் சுதந்திரம் குறித்த விஷயத்திலும் இந்தியா மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.அதாவது, சட்ட விதிகளைக் கடைப் பிடிப்பதில், இந்தியாவிற்கு 16-க்கு 8 புள்ளிகளே வழங்கப்பட்டுள்ளன.

“இவ்விஷயத்தில், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்செய்யப்பட்டதையும், தில்லி வன் முறை தொடர்பான வழக்கை நியாயமாக விசாரித்த நீதிபதி முரளிதர், தில்லிஉயர்நீதிமன்றத்திலிருந்து ஹரியானாஉயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதையும் ‘பிரீடம் ஹவுஸ்’ சுட்டிக் காட்டியுள்ளது.நாட்டில் ஊழல் மற்றும் அரசுநிர்வாக விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை குறைந்திருப்பதாக கூறும் ‘ப்ரீடம் ஹவுஸ்’, அரசாங்கத்தின் செயல்பாடுகள் பிரிவில் 12-க்கு 9 புள்ளிகளையே வழங்கியுள்ளது.தனிப்பட்ட சுயாட்சி பிரிவிலும் இந்தியா 16-க்கு 9 என்ற புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளது. இந்த பிரிவில் இந்தியா மோசமான செயல்திறனைக் கொண்டிருப்பதாக கூறும் ‘பிரீடம் ஹவுஸ்’, “கடந்த 2020-ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில், கொரோனா பொதுமுடக்கத்தின்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இந்திய அரசு மோசமாக கையாண்டது”என்று சம்பவங்களை நினைவு படுத்தியுள்ளது.இந்நிலையில், ‘ப்ரீடம் ஹவுஸ்’ அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்புதெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் உண்மை இல்லை என்றும், அனைத்து குடிமக்களையும் இந்தியா சமமாகவே பாவிக்கிறது என்றும் கூறியுள்ளது.