india

img

தில்லியின் சாலைகளில் கோட்டைச் சுவர்கள்... காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்....

புதுதில்லி:
தில்லியில் எல்லைகளில் காவல்துறையினர் தடுப்புச்சுவர்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிர்ச்சிகரமான நடவடிக்கைகளாக மாறியிருக்கிறது. நாடு விடுதலை அடைந்ததிலிருந்து எத்தனையோ கடுமையான போராட்டங்களை, கலவரங்களை, வன்முறைகளை சந்தித்திருக்கிறது. ஆனால் சுதந்திரஇந்தியாவின் வரலாற்றில் இப்போதுதில்லி காவல்துறை மேற்கொண்டிருப்பது போல அந்த மாநகரத்தையே தடுப்புச்சுவர்களால் சூழப்பட்ட - போராட்டக் காரர்களை உள்ளே வரவிடாமல் சுவர்எழுப்பப்பட்ட ஒரு மாநகரமாக மாற்றப்பட்டது இல்லை. 

தில்லியின் அனைத்து எல்லைகளிலும் சாலைகளை மிகப்பெரிய ராட்சதகிரேன்களைக் கொண்டு காவல்துறையினர் பெரும் பள்ளங்களாக மாற்றியுள்ளனர். சாலையின் நடுவே வெறும்தடுப்பு என்று இல்லாமல் இரும்புக் கம்பிகளையும் கற்களையும் கொண்டு சிமெண்ட் கலவையால் பூசி வலுவான கான்கிரீட் சுவர்களாக மாற்றியிருக்கிறார்கள்.  2 தடுப்புக்களுக்கு இடையே எந்திரங்கள் மூலம் கான்கிரீட்கலவையைக் கொட்டிக் கொண்டிருக் கிறார்கள். பல இடங்களில் இரும்பு கம்பிவேலிகளை பெரிய அளவிற்கு அமைத்திருக்கிறார்கள். சிங்கு, திக்ரி, காசிப்பூர், பாட்டியாலா-ரோதக்-தில்லி, ஜிந்த்-ஹிஸார்-சண்டிகர், ஹிஸார்- சிர்சா ஆகிய சாலைகளிலும் தில்லியை நோக்கி வரும் உத்தரப்பிரதேசத்தின் பல சாலைகளிலும் இத்தகைய தடுப்பு அரண்கள் கட்டப்பட்டு வருகின்றன.இது முற்றிலும் அறிவிழித்தனமானது என்றும் காவல் பணிக்கான மதிப்பீடுகளுக்கு எதிரானது என்றும் கடுமையாகச்சாடுகிறார் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் நீண்டகாலமாக சிஆர்பிஎப் மற்றும் பிஎஸ்எப் படைகளில் பணியாற்றிய அதிகாரியுமான என்.சி.அஸ்தானா.

ஒரு போராட்டத்தை தடுப்பதற்கு தடுப்புகள் ஏற்படுத்துவது என்பதுமுற்றிலும் தற்காலிக நடவடிக்கைதான்; ஆனால் தில்லியில் நிரந்தரமான கான்கிரீட்சுவர்களை சாலைகளில் காவல்துறை யினர் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்; நிரந்தரமான சாலைகளை தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்; கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து அமைக்கப்பட்ட சாலைகளை, இவர்கள் மீண்டும் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து கான்கிரீட் சுவர்களாக மாற்றுவது எத்தனை முட்டாள்தனமானது என்று அவர் சாடுகிறார். சிங்கு எல்லையில் நான்கு அடி, மூன்று அடி உயரம் என்ற அளவில் அடுத்தடுத்து கான்கிரீட் சுவர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்படி கோட்டைச் சுவர் போல கட்டி போராடும் மக்களைத் தடுப்பது என்பது, மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான இடைவெளியை மேலும் அதிகரிக்கவே செய்யும்; இதற்கு பெயர் தடுப்பு அரண் அமைப்பது அல்ல, இதற்கு பெயர் கோட்டைகளை எழுப்புவது என்பதுதான் எனக் குறிப்பிடும் என்.சி.அஸ்தானா, எல்லைகளில் பயங்கரவாதிகள் நமது பாதுகாப்பு படையினரை நோக்கி சுடும்போது அவர்களை தடுப்பதற்கும் நம்மைபாதுகாத்துக் கொள்வதற்கும், திருப்பித் தாக்குவதற்கும்தான் இத்தகைய தடுப்புச்சுவர்களை எழுப்புவது வழக்கம்; ஆனால் தில்லியில் இப்போது பயங்கரவாதிகளா ஊடுருவியிருக்கிறார்கள் என்று கேள்விக்கணை தொடுக்கிறார். 

“ஜனநாயகத்தில் கோட்டைச் சுவர்களுக்கு வேலை இல்லை. கோட்டைகொத்தளங்கள் என்பவை நிலப்பிரபுத்துவ காலக்கட்டத்தின் மிச்சசொச்சங்களே; நிலப்பிரபுக்களாக இருந்தவர்கள் அந்தக் காலக்கட்டத்தில் மக்களின் கோபாவேசத்தை தடுப்பதற்காக, அவர்களை ஒரு எல்லைக்கு மேல் முன்னேறி வர முடியாமல் தடுத்து தாக்குவதற்காக இப்படி கோட்டைச் சுவர்களை எழுப்பினார்கள்; அவர்கள் மக்களை எதிரிகளாக கருதினார்கள்? இப்போது தில்லி காவல்துறையும் மக்களை எதிரிகளாகக் கருதுகிறதா? அதனால்தான் சாலைகளில் கோட்டைச் சுவர்களை எழுப்பிக்கொண்டிருக்கிறதா எனவும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி அஸ்தானா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வன்முறை செய்யக்கூடும் என்று காவல்துறை கருதினால், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம்; அது பலனளிக்காது என்றால் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தலாம்; நீதிமன்ற அறிவுறுத்தல்களை பின்பற்றலாம். இப்படி சட்டப்பூர்வமான வழிகளில்தான் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, சாலைகளில் கோட்டைச்சுவர் எழுப்புவதால் பலன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, தில்லியைச் சுற்றியுள்ள அனைத்து எல்லைப் பகுதிகளிலும் இந்த தடுப்புச்சுவரை ஒட்டி இப்போதுபுதிதாக குவிக்கப்பட்டுள்ள போலீசாரின்கைகளில் இரும்புப் பைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இரண்டு கைகளாலும் அதை தாங்கிப்பிடித்து வரிசையாக நின்று அச்சுறுத்துவது சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. லத்திகளுக்குப் பதிலாக இரும்பு பைப்புகளை அளித்திருப்பது முற்றிலும் சட்டவிரோதமானது; காவல்துறையின் வரலாற்றில் இப்படிப்பட்ட முட்டாள்தனம் இப்போதுதான் அரங்கேறுவதைப் பார்க்கிறோம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.பல மாநிலங்களில் காவல்துறை யினர், போராட்டக்காரர்களை விரட்டுவதற்காக தடியடித் தாக்குதல் நடத்துகிறார்கள்.

அதற்கு மூங்கில் லத்திக் கம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மூங்கில் கம்பு என்பது மிகவும்கடுமையான ஒரு ஆயுதம். அது மனித உடலின் எலும்புகளை நொறுக்கிவிடும். தலையில் அடித்தால் மண்டை ஓடு உடையும். எனவே இது மிகவும் மனிதத்தன்மையற்றது என்று மத்திய ரிசர்வ் போலீஸ்படைகளிலும், பல மாநில காவல்துறைகளிலும் விவாதம் எழுந்து, இந்தப் படைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் கார்பனேட் பைப்கள்தான் லத்திக் கம்புகளாகபயன்படுத்தப்படுகின்றன. மூங்கில் கம்புகளே கொடூரமானவை என்று முடிவுக்கு வந்து பிளாஸ்டிக் லத்திகளுக்கு இந்திய காவல்துறை படிப்படியாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், தில்லி காவல்துறை இரும்புக் கம்பிகளை லத்திகளாக ஏந்திக் கொண்டு நிற்பது, இதுஜனநாயக நாடுதானா? என்ற கேள்வியை எழுப்புகிறது என அதிர்ச்சி தெரிவித்துள்ளார் என்.சி.அஸ்தானா.

விவசாயிகள் போராட்டத்தில் குவிந்திருப்பவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் கைகளில் வாள் வைத்திருக்கிறார்கள்; எனவே அவர்களை எதிர்கொள்வதற்கு இத்தகைய கொடூரமான ஆயுதங்கள் தேவை என்று சிலர்வாதிடுகிறார்கள்; இதற்கு இது பதில்அல்ல; போராட்டத்தில் ஈடுபட்டிருப்ப வர்கள் என்ன வைத்திருக்கிறார்களோ, அதற்கு இணையான ஆயுதங்களை நாங்களும் எடுப்போம் என்று கூறுவது காட்டுமிராண்டித்தனம்; போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை எதிர்கொள்வதற்கு சட்டம் என்ன ஆயுதங் களை பிரயோகிக்கச் சொல்கிறதோ அதைத்தான் தில்லி காவல்துறையும் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.போராட்டம் விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறுகிறது; அதை எப்படி கையாள வேண்டும் என்பதை காவல்துறை தனக்கு சட்டப்பூர்வமாக விதிக்கப்பட்டுள்ள வழிகளில்தான் அணுக வேண்டும்; போராட்டத்தை எப்படித் தீர்ப்பது என்பதை அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும்; மாறாக காவல்துறையே அரசாங்கமாக மாறக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.