india

img

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை - ராகுல் காந்தி கண்டனம்!

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி, கடந்த வியாழக்கிழமை(ஆக.8) இரவுப் பணிக்கு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் இன்று முதல் (ஆக. 14) விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 'கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூரமான, மனிதாபிமானமற்ற செயலின் அடுத்தடுத்த தகவல்கள் வெளிவருவதன் மூலமாக மருத்துவ சமூகம் மற்றும் பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களிலே மருத்துவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றால், பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி வெளியில் அனுப்பி படிக்க வைப்பார்கள்?.. நிர்பயா வழக்குக்குப் பிறகு இயற்றப்பட்ட கடுமையான சட்டங்கள்கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் ஏன் தோல்வியடைந்தன?..

இந்த தாங்க முடியாத வலியினால் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நான் நிற்கிறேன். அவர்களுக்கு எப்படியேனும் நீதி கிடைக்க வேண்டும். சமூகத்துக்கு சொல்லும்வகையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.