india

img

பாரத்மாதா கி ஜே.... இன்குலாப் ஜிந்தாபாத்... விவசாயிகள் நாடாளுமன்றத்தில் முழக்கம்....

புதுதில்லி:
நாடாளுமன்ற வளாகத்திற்கு இரு கிலோ மீட்டரே தூரம் உள்ள நாடாளுமன்ற வீதியில் விவசாயிகள் நாடாளுமன்றம் எழுச்சியுடன் நடைபெற்றது. சபாநாயகராக ஹன்னன் மொல்லா தேர்வு செய்யப்பட்டார். சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியவர்களுடன் சுழற்சிமுறை அடிப்படையில் 200 உறுப்பினர்களை மட்டும் கொண்டு இது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வியாழக்கிழமையன்று நடைபெற்ற அமர்வில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.விவசாயிகள் நாடாளுமன்றத்திற்கு விவசாயிகள் பலத்த பாதுகாப்புடன் பேருந்துகளில் வந்திறங்கினர். நாடாளுமன்றத்தில் இருப்பதுபோலவே, சபாநாயகர், துணை சபாநாயகர் ’விவசாயிகள் நாடாளுமன்றத்தை’ நடத்தினர். சுமார் 45 உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கருத்துக்களை எடுத்துவைக்கும் விதத்திலேயே இவை அமைந்திருந்தன.

முதல் நாளான வியாழனன்று வேளாண் சட்டங்களின் பாதகமான அம்சங்களை உறுப்பினர்கள் எடுத்துக்கூறினர். இவை எப்படியெல்லாம் விவசாயிகளுக்கு விரோதமானவை என்றும், தற்போது இருந்துவரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கும் எதிரானவை என்றும்  விவரித்தார்கள்.  மேலும் விவசாயிகள் நாடாளுமன்றத்தில் கிளர்ச்சிப்போராட்டங்களின் போது மரணமடைந்து தியாகிகளான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து, ஊடக சுதந்திரம் குறித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆரம்பத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் விவசாய சங்கப் பிரதிநிதிகள் காவல்துறையினரிடம் பேசியபின், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது எங்கள் முதல் வெற்றி என்று விவசாய சங்கத் தலைவர்கள் கூறினர்.

“ஜனநாயகத்தில், முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் இடம் நாடாளுமன்றமாகும். அதேபோன்று நாட்டு மக்களின் முக்கியமான பிரச்சனைகள் விவாதிக்கப்படும் இடமும் நாடாளுமன்றமாகும். ஆனாலும் நாடாளுமன்றத்தில் விவசாயிகளின் பிரச்சனைகள் விவாதிக்கப்படாததால் அதற்கு இணையான விவசாயிகள் நாடாளுமன்றத்தை இங்கே நடத்திக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் நாட்டில் நாங்கள்தான் பெரும்பான்மையானவர்கள். நாங்கள் கடந்த எட்டுமாதங்களாக தில்லியின் எல்லையில் அமர்ந்திருந்தோம். ஆட்சியாளர்கள் எங்களைப் பார்க்கவில்லை. இப்போதாவது அவர்கள் எங்களைப் பார்ப்பார்கள், நாங்கள் சொல்வதைக் கேட்பார்கள் என நம்புகிறோம்” என்று அவர்கள் கூறினர்.மாலை 5 மணிக்கு விவசாயிகள் நாடாளுமன்றம், “பாரத்மாதா கி ஜே” மற்றும் “இன்குலாப் ஜிந்தாபாத்” ஆகிய முழக்கங்களுடன் முடிவுக்கு வந்தது.   (ந.நி.)