india

img

விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்ட பெங்களூரு இளம்பெண் கைது.... ஆத்திரத்தின் உச்சத்தில் மதி இழக்கும் மோடி அரசு...

புதுதில்லி:
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சமூகஊடகங்களில் பதிவிட்ட பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் - காலநிலை செயற்பாட்டாளரான 22 வயதே நிரம்பிய இளம்பெண் திஷாரவியை, மத்திய பாஜக அரசு கைதுசெய்து சிறையில் அடைத்திருக் கிறது. இது நாடு முழுவதும் அதிர்ச்சிஅலைகளையும், கண்டனக் கணைகளையும் உருவாக்கி இருக்கிறது.

மோடி அரசின் கொடிய வேளாண்சட்டங்களை முற்றாக ரத்து செய்யவலியுறுத்தி தில்லியை முற்றுகையிட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் 82 வது நாளாக போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவு குவிந்திருக்கிறது. இதனொரு பகுதியாக, சில நாட்களுக்கு முன்பு சர்வதேச சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான சுவீடனைச் சேர்ந்த கிரெட்டாதன்பெர்க், டுவிட்டர் பதிவின் மூலமாக ஆதரவு தெரிவித்திருந்தார். இதேபோல அமெரிக்க பாப் இசை கலைஞர் ரிகானா, துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸின் உறவினர் மீனாஹாரீஸ் உள்ளிட்டோர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பதிவிட்டதால் உலக அளவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு பெருகியது. இதனால் மோடி அரசு உச்சகட்ட ஆத்திரமடைந்தது. வெளிநாடுகளில் உள்ள இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவோ, கைது செய்து ஆத்திரத்தை தீர்த்துகொள்ளவோ மோடி அரசால் முடியவில்லை. மாறாக, சமூக  ஊடகங்களில் பாஜக - ஆர்எஸ்எஸ் கூலிப் படையினரை ஏவி, வசைபாடி தீர்த்தார்கள்.

இந்நிலையில், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க், விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்ட வாசகங்களை, பெங்களூருவைச் சேர்ந்த திஷாரவி என்ற மாணவி, ஒரு போராட்டக் குழுசார்பில் மேற்கோள் காட்டி சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந் தார். திஷா ரவி ஒரு சுற்றுச் சூழல்செயற்பாட்டாளர் ஆவார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சக மாணவர்களிடையே, இளைஞர்களிடையே பிரச்சாரம் செய்து வருபவர்.

விவசாயிகளுக்கு ஆதரவானஇவரது பதிவால், ஆத்திரமடைந்த மோடி அரசு, தில்லி காவல்துறையை அவர் மீது ஏவியிருக்கிறது. வன்முறையை தூண்டிவிடுவதாக கூறி அவர் மீது தில்லி காவல்துறை தேச துரோக குற்றச்சாட்டு மற்றும் குற்ற சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேராக பெங்களூருக்கு சென்று அவரை கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும் படி நீதிபதியின் உத்தரவையும் பெற்று சிறையில் அடைத்துள்ளனர்.இளம் செயற்பாட்டாளர் திஷா ரவி, முற்றிலும் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டிரு ப்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சித்தபிரமைப்பிடித்த மோடி அரசாங்கம் நாட்டின் இளம் செயற்பாட்டாளர் களை துன்புறுத்துவதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும்; திஷா ரவிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற வேண்டும்; அவரை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “அற்பமான குற்றச்சாட்டுகளை புனைந்து திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அரசைவிமர்சிப்பவர்களைக் கொடுங்கோல் வழிகளில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது. மேலும் இத்தகைய தண்டிக்கும் போக்கைத் தவிர்த்து இளைஞர்களிடம் இருந்துஎழும் எதிர்ப்புக் குரல்களுக்குச் செவிமடுக்க வேண்டும் என்று பாஜக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.